Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் பாதிப்பை கட்டுப்படுத்தும் முறைகள்: வேளாண் துறையினர் அட்வைஸ்

விருதுநகர்: நிலக்கடலையில் வேர் அழுகல் நோய் பாதிப்பு இருக்கும் பகுதி வயல்களில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளை கடைபிடித்து மகசூல் இழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்வது அவசியம் என வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் முழுவதும் பரவலாக பயிரிடப்படும் நிலக்கடலையில் வேர் அழுகல் நோயினால் மகசூல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இந்நோய் மேக்ரோபோமினா பேசியோலினா என்ற பூஞ்சாண கிருமி தாக்குதலால் ஏற்படுகிறது. வேர் அழுகல் நோயினால் நிலக்கடலையில் 63 முதல் 100 சதவிகிதம் வரை மகசூல் இழப்புக்கு வாய்ப்புள்ளது. எனவே, வேர் அழுகல் நோய் பாதிப்பு இருக்கும் பகுதியில் விதை பண்ணையாக பதிவு செய்யப்பட்ட வயல்களில் ஒருங்கிணைந்த நோய் நிர்வாக முறைகளை கடைபிடித்து மகசூல் இழப்பு ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

நோய் சுழற்சி: மண் மற்றும் செடி சருகுகளில் இப்பூஞ்சாணத்தின் வித்து வெகு நாட்களுக்கு உறக்க நிலையில் இருக்கும். முதன்மை பாதிப்பு மண் மற்றும் விதை மூலமாக ஏற்படும். இரண்டாம் நிலை பாதிப்பு பாசன நீர், பண்ணை கருவிகள், கால்நடைகள், மனிதர்கள், மூலம் இப்பூஞ்சாணத்தின் வித்துகள் பரவி பாதிப்புகள் ஏற்படும். இதற்கான அறிகுறிகள்: வெண்மையான பூஞ்சாண வித்துகள் பாதிக்கப்பட்ட செடியின் மேல்புறத்தில் காணப்படுகின்றன.செடியின் அடிப்புறத்தில் காய்ந்தும், மஞ்சள் நிறமாக மாறியும் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட செடிகள் அடிப்புறத்தில் திசுக்கள் உதிர்ந்து காணப்படும். கடுகு போன்ற சிறிய அளவு பூஞ்சாணத்தின் வித்துகள் பாதிக்கப்பட்ட இடத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட செடியில் நீலம் கலந்த சாம்பல் நிறமுடைய விதைகள் உண்டாகின்றன.

அழுக நோய் வராமல் கட்டுபடுத்தல்: மண்ணின் மேல் உள்ள பயிர் கழிவுகளை ஆழமாக உழ வேண்டும். விதைகளை டிரைகோடெர்மா விரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம் அல்லது ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் பூஞ்சான கொல்லி மூலம் விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். டிரைக்கோடெர்மா விரிடி எக்டருக்கு 2- 5 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் இடலாம். ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு எக்டருக்கு 500 கிலோ என்ற அளவில் பயன்படுத்தலாம். ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு கிராம் கார்பன்டாசிம் கலந்த கரைசலை பாதிக்கப்பட்ட வேர் பகுதியில் மண்ணில் நனையும் படி ஊற்றி வேர் அழுகல் நோயை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு தெரிவித்துள்ளனர்.