Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோவையில் வரும் 15ம் தேதி நடக்கும் திமுக முப்பெரும் விழா அரங்கம் அமைப்பதற்கு கால்கோள் விழா: அமைச்சர் சு.முத்துசாமி  துவக்கி வைத்தார்

கோவை: திமுக சார்பில் முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வரும் 15ம்தேதி நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். இதையொட்டி, விழா அரங்கம் அமைக்க கால்கோள் விழா நேற்று நடந்தது. இதை, வீட்டு வசதி துறை அமைச்சர் சு.முத்துசாமி துவக்கி வைத்தார். மாவட்ட திமுக செயலாளர்கள் நா.கார்த்திக் (மாநகர்), தளபதி முருகேசன் (கோவை தெற்கு), தொண்டாமுத்தூர் ரவி (கோவை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்து அமைச்சர் சு.முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது: நடந்து முடிந்த 18-வது மக்களவை தேர்தலில், தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 நாடாளுமன்ற தொகுதியிலும் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. நாடு முழுவதும் ஒப்பிடுகையில், வேறு எந்த கூட்டணியும் இப்படி 100க்கு 100 சதவீதம் வெற்றி பெற்றது இல்ைல. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திமுக முப்பெரும் விழா கோவை பீளமேடு கொடிசியா மைதானத்தில் வரும் 15ம்தேதி மாலை 4 மணிக்கு நடக்கிறது.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றுகிறார். திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் திமுக அணியின் 40 எம்.பி.க்களும் இவ்விழாவில் பங்கேற்க உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் பெரும் முயற்சியால் இந்தியா கூட்டணி, நாடு முழுவதும் அதிக இடங்களை பிடித்துள்ளது. மத்தியில், இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்க முடியாவிட்டாலும், பா.ஜ. கூட்டணி தன்னிச்சையாக செயல்படாதவாறு முடக்கி உள்ளது.

இதுவே, இந்தியா கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி. தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்கள் மக்களிடம் சென்றடைந்துள்ளது. அதனால்தான், மக்கள் 40-க்கு 40 தொகுதியிலும் வெற்றியை தந்துள்ளார்கள். இதன்மூலம், தமிழகத்தில் மேற்கு மண்டலம் மொத்தமாக திமுக வசம் வந்துள்ளது. முப்பெரும் விழாவில், பல லட்சம் தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.