Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மன உறுதியை மனதில் விதைப்போம்!

கடலைச் சுற்றிப் பார்க்கக் கப்பலில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். கப்பல் நடுக்கடலை நெருங்குகிறது. யாரும் எதிர்பாராத விதமாகப் புயல், கப்பலைச் சின்னா பின்னமாகச் சேதப்படுத்துகிறது. வாழ்க்கையில் இதுபோன்ற சம்பவங்கள் ஏராளமாக நடப்பதுண்டு, வாழ்வா? சாவா? என்ற போராட்டம் ஏற்படுவதாக வைத்துக் கொள்வோம். அந்த நேரத்தில் பயந்தால், போராட மறந்தால், உடனே மரணம் உன்னை கைகுலுக்கி வரவேற்கும். நீ சாகப் பிறந்தவன் அல்ல. சாதிக்கப் பிறந்தவன். நொறுங்கிய கப்பலில் ஏதாவது ஒரு மரக்கட்டையை பிடித்துக் கொண்டு புயலோடு சிறிது நேரம் போராடு.வேறு கப்பலில் வந்து மனிதர்கள் காப்பாற்றும் வரை போராடு. உறுதியாக வேறொரு கப்பல் வந்து உன்னைக் காப்பாற்றும் என்று நம்பு.ஒரு வேளை உன்னுடைய நம்பிக்கை பொய்யானாலும் பயப்படாதே, மன உறுதியை இழந்துவிடாதே, உனக்கு கைகளும், கால்களும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சற்று தலையைத் தூக்கி கலங்கரை விளக்கைப் பார். அதை நோக்கி நீந்தத் தொடங்கு.தூரம் அதிகமாக இருக்கலாம்.உடல் வலிமை குறைவாக இருக்கலாம், ஆனால் எதிர்நீச்சலடிக்கும் மனப்பான்மையைக் குறையவிடாமல் போராடு, உன்னால் கரையை அடையும் வரை தொடர்ந்து நீந்த முடியும். இவ்வாறாகத் துன்பப்பட்டுக் கரையை அடைந்து விட்டால் கரை உனக்கு மலர்மாலை சூட்டி சரித்திரச் சாதனையாளர் என்று பெயரும் சூட்டும். அப்படிப்பட்ட ஒரு சாதனைப் பெண் தான் டச்யானா மெக்ஃபெட்டன்.

முதுகெலும்பில் துளையுடன் இடுப்புக்குக் கீழே இயங்காத தன்மையோடு, ரஷ்யாவில் பிறந்தார் டச்யானா. பிறந்த மூன்று வாரத்துக்குள் அறுவை சிகிச்சை செய்யாவிட்டால் குழந்தையைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் டச்யானாவின் அம்மாவால் மருத்துவ ஏற்பாடு செய்ய இயலவில்லை. மூன்று வாரங்களுக்குப் பிறகும் குழந்தை உயிரோடு இருந்ததில் மருத்துவர்களுக்கு ஆச்சரியம். இந்த நிலையில் குழந்தையை ஆதரவற்றவர்கள் இல்லத்தில் சேர்த்து விட்டார் அவரது அம்மா. மிகவும் ஏழ்மை நிலையில் இருந்த அந்த இல்லத்தால் டச்யானாவுக்கு ஒரு சர்க்கர நாற்காலி கூட ஏற்பாடு செய்யமுடியவில்லை. ஆறு ஆண்டுகள் வரை தோள்களைக் கால்களாகவும், கைகளைப் பாதங்களாகவும் பயன்படுத்தி நகர்ந்தார் டச்யானா.அமெரிக்காவைச் சேர்ந்த டிபோரா அரசாங்க அலுவல் காரணமாக ரஷ்யாவுக்கு வந்தார்.ஆதரவற்றவர் இல்லத்தில் டச்யானாவைச் சந்தித்தார். நோய்களோடு உடல் பலம் இன்றி இருந்த டச்யானாவைத் தத்தெடுக்க முடிவு செய்தார் டிபோரா.

ரஷ்ய மொழி மட்டுமே அறிந்திருந்த அந்த குழந்தை ஆங்கிலம் பேசும் அம்மாவுடன் அமெரிக்காவுக்கு வந்து சேர்ந்தது.முதல் காரியமாக ஒரு சக்கர நாற்காலி வாங்கி கொடுத்தார். பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சில அறுவை சிகிச்சைகளும் டச்யானாவுக்குச் செய்யப்பட்டன.பள்ளியில் சேர்ந்ததும் ஆர்வத்தோடு படித்தார் டச்யானா. ஓய்வுநேரத்தில் விளையாட்டுகளில் ஈடுபட வைத்து, அவரது தசைகளை வலுவாக்கினார் டிபோரா. நீச்சல், ஜிம்னாஸ்டிக்ஸ், சக்கர நாற்காலி கூடைப்பந்து, பனிச் சறுக்கு ஹாக்கி, ஸ்கூபா டைவிங் என வரிசையாகக் கற்றுக்கொண்டு களத்தில் இறங்கினார் டச்யானா. இறுதியில் சக்கர நாற்காலி ஓட்டப்பந்தயத்தில்தான் அவரது ஆர்வம் நிலைகொண்டது. தன்னுடைய வலுவான தோள்கள் மூலம் எளிதில் வெற்றிகளைக் குவிக்க ஆரம்பித்தார் டச்யானா.பள்ளியில் படிக்கும்போது மற்ற மாணவர்களுடன் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதற்கு டச்யானாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.எவ்வளவோ பேசிப் பார்த்தார். சக்கரநாற்காலி ஓட்டம் பாதுகாப்பற்றது என்று சொன்னார்கள். ஒரு மாற்றுத்திறனாளியை மற்றவர்களுடன் ஓட வைக்க பள்ளி நிர்வாகம் விரும்பவில்லை. சாதாரணமானவர்களையும், மாற்றுத்திறனாளிகளையும் சமமாக நடத்த வேண்டும் என்று டச்யானாவும், டிபோராவும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.பதக்கங்களுக்கோ, பணத்துக்கோ இவர்கள் போட்டிகளில் பங்கேற்க நினைக்கவில்லை. எல்லோரையும் போலவே தாங்களும் என்பதை உணர்த்துவதற்கே போட்டிகளில் பங்கேற்கிறார்கள். அதனால் பள்ளிகளில் எல்லோருக்கும் சமமான வாய்ப்பு வழங்கப்படவேண்டும். மாற்றுத்திறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாகப் பள்ளிகளிடையே தனிப்போட்டிகளையும் நடத்தலாம் என்று தீர்ப்பு வெளியானது. இந்த சட்டம் டச்யானா என்று அழைக்கப்பட்டு டச்யானாவிற்கு பெருமை சேர்த்தது.

15 வயதில் மாற்றுத் திறனாளிகளுக்கான கோடை ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப்பதக்கம் பெற்ற டச்யானாவின் வெற்றி வேகத்தை இன்றுவரை குறைக்க முடியவில்லை. இரண்டு ஆண்டுகளில் தங்கப்பதக்கம் பெற்று உலக சாம்பியனாக மாறியதோடு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் புதிய சாதனை படைத்தார் டச்யானா.இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு 2010 நியூயார்க், 2011 சிகாகோ, 2015 பாஸ்டனில் நடைபெற்ற மாரத்தான் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டங்களைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டில் மட்டும் நான்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு அனைத்திலும் சாம்பியன் பட்டங்களை பெற்றார். இதுவரை யாருமே செய்யாத உலகச் சாதனை இது! அந்த ஆண்டே ஆறு தங்கப் பதக்கங்களை வென்று உலக சாம்பியன் பட்டங்களை குவித்தார்.

அதுமட்டுமல்ல மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும் அவர்களின் பெற்றோருக்கும் தன்னம்பிக்கை வகுப்புகள் எடுத்து வருகிறார் டச்யானா. கவுன்சிலிங் கொடுக்கிறார்.மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு என்று இருக்கும் டச்யானா, மற்றவர்களுக்கும் ஆரோக்கியம் தொடர்பாக பயிற்சி அளிக்கிறார். குழந்தைகளுக்கான புத்தகங்கள் எழுதி எழுத்தாளராகவும், பன்முகத்திறமை உடையவராகவும் திகழ்ந்து வருகிறார். தன்னைப் போன்ற மாற்றுத்திறனாளி சாதனையாளர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து ஒரு சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார்.யாருமே அறியாமல் நோயால் இறந்து போக இருந்த டச்யானாமன உறுதியால் சாதித்து, மற்றவர்களையும் ஊக்கப்படுத்தி சாதனை மங்கையாகத் திகழ்ந்து வருகிறார். கடலில் அலைகள் மோதினாலும் கற்பாறைகள் அசையாது இருப்பது போல, டச்யானா போன்று மன உறுதியை மனதில் விதைத்து செயல்படுபவர்களால்தான் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட முடிகிறது. மன உறுதி தான் வைராக்கியத்தை உருவாக்குகிறது,இலட்சியத்தை நிறைவேற்றுகிறது. எனவே மனஉறுதியை மனதில் விதைப்போம்,வாழ்வில் சாதிப்போம்.