*கலெக்டர் வழங்கினார்
தர்மபுரி : தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 538 மனுக்களை பெற்றுக்கொண்டு, தீயணைப்பு துறைக்கு சிறப்பு உபகரணங்களை கலெக்டர் சதீஸ் வழங்கினார்.தர்மபுரி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், நேற்று புதிய கலெக்டர் அலுவலக அதியன் கூட்டரங்கில், கலெக்டர் சதீஸ் தலைமையில் நடந்தது.
இதில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா மற்றும் சிட்டா பெயர் மாற்றம், புதிய குடும்ப அட்டை வேண்டுதல், வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்தும் மொத்தம் 538 மனுக்களை அளித்தனர்.
மனுக்களை அலுவலர்களிடம் வழங்கி, உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்க கலெக்டர் உத்தரவிட்டார்.கூட்டத்தில், கலெக்டரின் சமூக பொறுப்பு நிதியிலிருந்து(சிஎஸ்ஆர்) தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறைக்கு கிணற்றில் தவறி விழுந்த மனிதர்களை மீட்க ரூ.7,280 மதிப்பீட்டில் ஒரு மீட்பு வலை, ஆழமான நீர்நிலைகள், கடல், கல்குவாரி, ஆறுகள் மற்றும் அணைகளில் தவறி விழுந்தவர்களை மீட்க ஏதுவாக ரூ.1.94 லட்சம் மதிப்பீட்டில் ஒரு ஸ்கூபா டைவிங் உபகரணம் என மொத்தம் ரூ.2.01 லட்சம் மதிப்பிலான சிறப்பு உபகரணங்களை, கலெக்டர் சதீஷ் வழங்கினார். தொடர்ந்து, 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3.98 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால், செயற்கை கை உள்ளிட்ட ரூ.5.99 லட்சம் மதிப்பீட்டில் கலெக்டர் வழங்கினார்.
முன்னதாக, முதலமைச்சர் விளையாட்டு போட்டிகளுக்கு இணையவழி மூலம் முன்பதிவு செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ள செல்பி ஸ்டாண்டில், கலெக்டர் புகைப்படம் எடுத்துக்கொண்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சிகளில், எஸ்பி மகேஷ்வரன், டிஆர்ஓ கவிதா, உதவி ஆணையர்(கலால்) நர்மதா, மாவட்ட தீயணைப்பு அலுவலர் அம்பிகா, தனித்துணை கலெக்டர் சுப்ரமணியன், மாவட்ட வழங்கல் அலுவலர் செம்மலை, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்(பொ) வள்ளி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.