கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் பொங்கல் தொகுப்பில் பொதுமக்களுக்கு புதிய பானை, அடுப்பு வழங்க வேண்டும்
*மண்பாண்ட தொழிலாளர்கள் மனு
ஜோலார்பேட்டை : திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பூஷணகுமார், ஊராட்சிகள் உதவி இயக்குனர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் சாலை வசதி, கடனுதவி, குடிநீர் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 418 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்களை பெற்ற கலெக்டர், அவற்றின் மீது உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இக்கூட்டத்தில் தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரியத்தினர் அளித்த மனுவில், `பொங்கல் திருநாளன்று பொதுமக்களுக்கு புதிய பானையும், அடுப்பும் வழங்க வேண்டும். பருவமழை பெய்கின்ற காலத்தில் மண்பாண்ட தொழில் செய்ய முடியாததால், அந்த காலத்தில் மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். மண்பாண்டங்களில் உணவு வகைகளை சமைத்து சாப்பிடுவது குறித்து எதிர்கால சந்ததியினருக்கு தெரியும் வகையில் பள்ளி பாடப்புத்தகத்தில் ஒரு பாடப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.
திருப்பத்தூர் அடுத்த பாச்சல் ஊராட்சி, ஹயாத் நகர் பொதுமக்கள் அளித்துள்ள கோரிக்கை மனுவில், எங்கள் பகுதியில் உள்ள சாலைகள் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது. இதனால் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. மேலும், மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகிறோம். எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.
தமிழக விவசாயிகள் சங்க மாநில துணைத்தலைவர் ராஜாபெருமாள் தலைமையில் விவசாயிகள் அளித்த மனுவில், மாவட்டம் முழுவதும் உள்ள கிராம சாலைகளில் ஊராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடப்படுகிறது. ஒரு சில இடங்களில் சாலை குறுகலாக உள்ளது. அந்த பகுதிகளிலும் மரம் நடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட உள்ளது. எனவே, சாலை பெரிதாக உள்ள இடத்தில் மட்டும் மரக்கன்றுகள் நட வேண்டும்.
மேலும், ஆலங்காயம் அருகே பூங்குளம் பகுதியில் சரிவர இணையதள வசதி கிடைப்பது இல்லை. எனவே, அந்த பகுதியில் பி.எஸ்.என்.எல். டவர் அமைக்க வேண்டும் என கூறியிருந்தனர்.தொடர்ந்து, அரசு பள்ளிகளில் 12ம் வகுப்பு படித்து முடித்து உயர்கல்வியில் சேர்ந்துள்ள 18 மாணவிகளுக்கு நம்ம ஸ்கூல் நம்ம ஊர் திட்டத்தின் கீழ் கலெக்டர் சிவசவுந்திரவல்லி மடிக்கணினி வழங்கினார்.
