கையெறி குண்டு,ராக்கெட் லாஞ்சர் பறிமுதல்; பஞ்சாப்பில் தீவிரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: ஐஎஸ்ஐயுடன் தொடர்புடைய 2 பேர் கைது
சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள அமிர்தசரஸில் தீவிரவாத தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசின் உளவு துறையின் மூலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தி 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாப் டிஜிபி கவுரவ் யாதவ் எக்ஸ் தளத்தில் நேற்று பதிவிடுகையில்,
அமிர்தசரஸ் போலீசார், மத்திய அரசு ஏஜென்சிகள் ஒத்துழைப்புடன் அமிர்தசரஸ் போலீசார் மெஹ்தீப் சிங் , ஆதித்யா என்ற ஆதி ஆகிய 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர். இவர்களிடம் இருந்து கையெறி குண்டு, ராக்கெட் லாஞ்சர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அமிர்தசரஸில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டிருந்தனர்.
பெரோஸ்பூர் சிறையில் உள்ள ஹர்பிரீத்சிங் என்ற விக்கியுடன் தொடர்பில் இருந்தனர். ஹர்பிரீத் சிங்குக்கு ஐஎஸ்எஸ்யுடன் தொடர்பு உள்ளது. பாகிஸ்தான் எல்லையில் இருந்து டிரோன் மூலம் ஆயுதங்களை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார். போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,மேஹ்தீப் சிங் வடாலி என்ற கிராமத்தை சேர்ந்தவர். ஆதி பாகாசின்னா என்ற கிராமத்தை சேர்ந்தவர். அவர்கள் பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரிடமும் தொடர்ந்து விசாரணை நடக்கிறது.