Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

கிரீன்வேஸ் ரோடு-மந்தவெளி சுரங்கப்பாதை அமைக்கும் பணி இம்மாதம் நிறைவடையும்: மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தகவல்

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் கிரீன்வேஸ் ரோடு - மந்தவெளி இடையே சுரங்கப்பாதை அமைக்கும் பணி இம்மாதத்தில் நிறைவடையவுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதல் கட்டம் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் நிலையில், அதிகரித்து வரும் போக்குவரத்து தேவையை நிவர்த்தி செய்ய இரண்டாம் கட்ட திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது 128 நிலையங்கள் மற்றும் 118.9 கி.மீ. நீளத்துடன் மூன்று வழித்தடங்களை உள்ளடக்கிய திட்டமாகும். இதில் வழித்தடம்-3, வழித்தடம்-4 மற்றும் வழித்தடம்-5 ஆகியவை அடங்கும். இந்த திட்டம் சென்னையின் பல்வேறு பகுதிகளை இணைத்து, பயணிகளுக்கு விரைவான மற்றும் சுற்றுச்சூழல் நட்பு போக்குவரத்து வசதியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது.

இதில் வழித்தடம் 3 என்பது மாதவரம் முதல் சிப்காட் வரை மந்தவெளி வழியாக செல்லும் 45.8 கிலோமீட்டர் நீளமான பாதையாகும். இது சென்னையின் வடக்கு பகுதிகளை தெற்கு பகுதிகளுடன் இணைக்கும் முக்கியமான பாதையாக அமையும். இந்த திட்டத்திற்காக ‘நொய்யல்’ மற்றும் ‘வைகை’ என தமிழகத்தின் முக்கிய ஆறுகளின் பெயரில் இரண்டு சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் நிலத்தடியில் துல்லியமாக சுரங்கங்களை அமைக்கும் திறன் கொண்டவை.

கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ‘நொய்யல்’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் கிரீன்வேஸ் ரோடு நிலையத்திலிருந்து தனது பயணத்தை தொடங்கியது. ஆரம்பத்தில் ஆறு மாதங்களில் 750 மீட்டர் நீள சுரங்கப்பாதையை அமைத்து மந்தவெளி நிலையத்தை அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இந்தப் பகுதி முடிவடைந்தால், கிரீன்வேஸ் ரோடு, சி.ஐ.டி. நகர், மயிலாப்பூர் போன்ற முக்கிய பகுதிகள் மெட்ரோ சேவையுடன் இணைக்கப்படும். இது சென்னையின் போக்குவரத்து நெரிசலை கணிசமாக குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், ஆறு மாத கால இலக்கை அடைய முடிவடையாததற்கு மந்தவெளியில் எதிர்பாராத பொறியியல் சவால்கள் காரணம் என சென்னை மெட்ரோ நிறுவன ரயில் அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அதிகாரி கூறியதாவது:

டயாஃப்ராம் சுவர் கட்ட நான்கு பெரிய தண்ணீர் மற்றும் கழிவுநீர் குழாய்களை மாற்ற வேண்டியிருந்தது. இதில் 800 மி.மீ விட்டமுள்ள ஒரு தண்ணீர் குழாயும், ஒரு மீட்டர் விட்டமுள்ள மற்றொரு குழாயும், 900 மி.மீ மற்றும் 1.2 மீட்டர் விட்டமுள்ள இரண்டு பெரிய கழிவுநீர் குழாய்களும் அடங்கும். குழாய்களை மாற்றுவதற்கு ஒரு பம்பிங் கிணறும் கட்ட வேண்டியிருந்தது. இது எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமானதாக இருந்ததால் அதிக காலம் எடுத்தது. சந்திப்பு இடம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியது. ஒப்பந்தக்காரரின் தாமதமும் பணி முன்னேற்றத்தை பாதித்தது. இந்த விஷயங்கள் திட்டத்தை மாதக்கணக்கில் தாமதப்படுத்தின. இப்போது அனைத்து தடைகளையும் கடந்து, நடப்பு அக்டோபர் மாதத்தில் இந்தப் பணி நிறைவடையும் . இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வரும் 2028ம் ஆண்டுக்குள் கிரீன்வேஸ் ரோடு மற்றும் மயிலாப்பூர் இடையே சேவைகள் தொடங்கும். இது சென்னையின் விரிவடையும் மெட்ரோ ரயில் நெட்வொர்க்கிற்கு முக்கியமான மைல்கல்லாக அமையும்.