வால்பாறை : வால்பாறையில் அக்காமலை கிராஸ் ஹில்ஸ் பகுதியில் பசுமை போர்த்திய மலைகள் சுற்றுலா பயணிகள் கண்களுக்கு இயற்கை விருந்து படைத்து வருகிறது.
சமீபத்தில் பெய்த பருவமழை சாரல் மலைப்பகுதிகள் முழுவதும் பசுமை நிறைந்த புல்வெளிகளாக மாறியுள்ளன. மேகங்கள் மலை உச்சிகளை தழுவும் காட்சி, குளிர்ச்சியான தென்றல் காற்று இயற்கையின் அழகை மேலும் மெருகுபடுத்தியுள்ளது.
அக்காமலை கிராஸ் ஹில்ஸ் பகுதியில் தற்போது சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை. வனத்துறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணங்களால் இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் நுழைவதை தடை செய்துள்ளது. இதனால் இயற்கை தனது இயல்பான அமைதியுடன் திகழ்கிறது. எனினும், பாரளை பகுதியில் இருந்து தென்படும் அக்காமலை மலைத்தொடரின் பசுமை காட்சி மெய்மறக்க வைக்கும் அழகை அளிக்கிறது.
மேகங்களின் நடுவே மிதந்து நிற்கும் பசுமையான மலைகள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களுக்கு சிறந்த காட்சியாக அமைந்துள்ளது. இயற்கையின் சிறப்பை பாதுகாக்கும் நோக்கில் வனத்துறை தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
வால்பாறை பகுதிக்கு வரும் மக்கள், பயணிகளுக்கு பசுமையையும் இயற்கையையும் காக்கும் பொறுப்பு இருப்பதாக வனத்துறையினர் அறிவுறுத்தி வரும் நிலையில், அக்காமலை கிராஸ் ஹில்ஸ் தற்போது வால்பாறையின் அழகை தூரத்தில் இருந்தே ரசிக்கக்கூடிய இயற்கை மலை பகுதியாக திகழ்கிறது.

