தங்களுக்கு கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இந்த சமூகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் நிச்சயம் போற்றப்பட வேண்டியவர்கள். அவர்களில் ஒருவர்தான் புதுக்கோட்டை சிவக்குமார். புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி செல்லும் சாலையில் கேப்பரை என்ற இடத்தில் ஒரு சிறிய தேனீர்க்கடை நடத்தும் இவர், அதில் இருந்து கிடைக்கும் மிகச்சிறிய வருமானத்தில் பெரும் சேவை ஆற்றுகிறார். பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்குவது, அதை அவர்கள் வளர்த்தெடுக்க ஊக்குவிப்பது என தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். இவர் அளித்த மரக்கன்றுகள் இன்று பல கிராமங்களில் வளர்ந்து நிழலையும், குளிரான காற்றையும் வழங்கிக்கொண்டிருக்கின்றன. ஒரு காலைப்பொழுதில் தேனீர் தயாரிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சிவக்குமாரை சந்தித்துப் பேசினோம்.
``3வது வரைக்கும்தான் படிச்சிருக்கேன். நான் சின்ன வயசுல இருக்கும்போது அம்மா இறந்துட்டாங்க. பசிக்கொடுமை. சாப்பாடே கிடைக்கலை. அப்பா என்னை ஒரு ஆட்டு வியாபாரிகிட்ட வேலைக்கு அனுப்ப திட்டமிட்டாரு. அங்க போக எனக்கு பிடிக்கலை. அறந்தாங்கியில் எங்களோட உறவினர் டீக்கடை நடத்தினாரு. அங்க போய் வேலைக்கு சேர்ந்தேன். சம்பளத்தைக் கூட எதிர்பார்க்கலை. பசியைப் போக்க சோறு கிடைச்சா போதும்னு அங்க வேலை பார்த்தேன். 10 வயசுல போன நான் 25 வயசுலதான் அங்கிருந்து வந்தேன். அங்க நான் சந்திச்ச மனிதர்கள், பார்த்த காட்சிகள் எல்லாம் என்னை ரொம்பவே பாதிச்சது. சிலர் குழந்தைகளை தூக்கிட்டு வந்து ஒரு பாலை வாங்கி, குழந்தைக்கு கொடுத்துட்டு கொஞ்சமா அவங்களும் குடிப்பாங்க. இன்னொரு பால், டீ வாங்க அவங்ககிட்ட காசு இருக்காது. இதைப் பார்த்துட்டு, இதுபோன்ற ஆளுங்களுக்கு நான் அதிகமாக பால் ஊத்தி கொடுப்பேன். 25 வயசுக்கு அப்புறம் நான் வெளியில வந்து டீக்கடை ஆரம்பிச்சேன். நான் பார்த்த அந்த காட்சியால, என் கடைக்கு வர்ற குழந்தைகளுக்கு பால் இலவசம்னு சொல்லி இன்னைக்கி வரைக்கும் கொடுக்குறேன். கடையில முறுக்கு அதிரசம்னு இருக்கும். சில வயசானவங்க வந்து பலகாரம் எவ்வளவுன்னு கேப்பாங்க.
6 ரூபாய்னு சொன்னதும் பாக்கெட்ல இருக்குற சில்லரையை எடுத்து எண்ணி பார்ப்பாங்க. இதனால் அவங்களுக்கு பால், டீ, பலகாரம்னு கொடுக்க ஆரம்பிச்சேன். மாற்றுத்திறனாளிகளுக்கும் அதுபோல கொடுக்க ஆரம்பிச்சேன். எங்க பகுதியில பூ சாகுபடி பண்ற விவசாயிங்க அதிகம். அவங்களுக்கு வாரம் ஒருமுறைதான் மார்க்கெட்டுல பூவுக்கான பேமன்ட் கொடுப்பாங்க. அதனால அவங்க என் கடையில அக்கவுன்ட் வச்சி டீ, பலகாரம் சாப்பிடுவாங்க. வாரம் ஒருமுறை பேமன்ட் கொடுக்கும்போது மொத்தக்காசையும் கொடுத்துருவாங்க. கொரோனா சமயத்துல மத்தவங்க போலவே என்கிட்ட வர்ற விவசாயிங்களோட வாழ்வாதாரமும் பாதிச்சது. உடனே நான் அவங்க கொடுக்க வேண்டிய பணத்தையெல்லாம் வேணாம்னு சொல்லிட்டேன். இது சின்ன தொகைதான். ஆனா எங்க குடும்பத்துக்கும், என்னோட தொழிலுக்கும் அது பெரிய தொகை. ஆனாலும் இந்த விசயம் எனக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசத்தைக் கொடுத்துச்சி.
இப்படியே பொது சேவைகள்ல இறங்கின நான் மரம் வளர்ப்புலயும் ஆர்வம் காட்ட ஆரம்பிச்சேன். முதல்ல பொதுமக்களுக்கு இலவசமா மரக்கன்றுகளை கொடுத்தேன். அதுல சில பேர் மரக்கன்றுகளை சரியா பராமரிக்கலை. இதனால நான் நல்லா மரம் வளர்க்குறவங்களுக்கு பரிசுன்னு அறிவிச்சேன். எல்லாரும் மரங்களை சிறப்பா வளர்க்க ஆரம்பிச்சாங்க. இப்ப நான் ஒவ்வொரு பள்ளிக்கூடமா போய் பசங்க கிட்ட மரக்கன்றுகளை இலவசமாக கொடுக்குறேன். கொடுக்கும்போதே, இதை மரமா வளர்த்துட்டீங்கன்னா வெள்ளிக்காசு பரிசா கொடுப்பேன்னு சொல்றேன். அவங்களும் ஆர்வமா வளர்த்து பரிசை வாங்குறாங்க. பள்ளிக்கூடம் மட்டுமில்லாம அவங்களோட சொந்த ஊர்ல இருக்குற வீட்ல, பொது இடங்கள்லயும் மரக்கன்றுகளை நட்டு வளர்க்குறாங்க. சிலருக்கு சிகரெட், மது அருந்துவதுன்னு சில பழக்கங்கள் போதை தர்றதா இருக்கும். எனக்கு மரக்கன்றுகளை வளர்த்தெடுக்குறதும், கஷ்டப்படுறவங்களுக்கு உதவுறதும் போதை தருது. இதனாலதான் நான் என்னோட டீக்கடை தொழிலுக்கு இடையில இதை செய்றேன். இதுக்கு என்னோட மனைவி வீரம்மாள், மகன் சிவராமகிருஷ்ணன், மகள்கள் சிவரஞ்சனி, கிருஷ்ணவேணி ஆகியோரும் உறுதுணையா இருக்குறதுதான் காரணம்’’ எனக்கூறி நம்மை நெகிழ வைக்கிறார்.
தொடர்புக்கு:
சிவக்குமார்: 90953 36300.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாங்கனாம்பட்டி, மழவராயன்பட்டி, வம்பன் காலனி, தட்சணாபுரம், மேலத்தொட்டி உள்ளிட்ட கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு சிவக்குமார் வழங்கிய கன்றுகள் இன்று மரமாகி நிழல் தருகின்றன.
பசியாற்றும் பழமரங்கள்
பசியில்லாத ஊர், அனைத்து மாணவர்களுக்கும் அரசு வேலை, பசுமையான கிராமம் இதுதான் எனக்கு லட்சியம். இதற்காக சில கிராமங்களைத் தேர்ந்தெடுத்து சேவையாற்ற வேண்டும் எனக்கூறும் சிவக்குமார் பழமரக்கன்றுகளை ஆங்காங்கு வளர்த்தால் மனிதர்களும், வன விலங்குகளும், பறவைகளும் பசியாறுவார்கள். இதற்கு நாம் விலை உயர்ந்த பழமரக்கன்றுகளைத்தான் நட வேண்டும் என்றில்லை. மா, நாவல், அத்தி போன்ற மரக்கன்றுகளையும் நட்டு வளர்க்கலாம் என ஆலோசனை தருகிறார்.
