டெல்லி: அந்தமான் நிகோபார் தீவில் அமைய உள்ள கிரேட் நிகோபார் திட்டத்தால் சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்த கூடியது என்று காங்கிரஸ் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியா காந்தி எச்சரித்துள்ளார். அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தில் கிரேட் நிகோபார் தீவு உள்ளது. இங்கு ரூ.72,000 கோடி மதிப்பில் மிகப்பெரிய உள்கட்டமைப்பு திட்டத்தை அந்தமான் நிகோபார் தீவுகளில் ஒருங்கிணைந்த வளர்ச்சி கழகம் மேற்கொள்ள உள்ளது. இதில் துறைமுகம், சர்வதேச விமான நிலையம், சிறு நகர்ப்பகுதி, மின் உற்பத்தி நிலையம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன. ஆனால் இந்த உட்கட்டமைப்புகள் அமையும் இடம் நிக்கோபாரிஸ் சோம்பென்ஸ் பழங்குடியின மக்கள் வாழும் இடங்கள் ஆகும்.
எனவே இந்த திட்டத்தால் நிகோபார் தீவு மக்களுக்கும் சுற்றுசூழலுக்கும் பல பிரச்சனைகள் ஏற்படும் என்று சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். 2004ம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட சுனாமியின் போது நிக்கோபாரிஸ் பூர்வகுடி மக்கள் தங்கள் கிராமங்களில் இருந்து தாற்காலிகளாக வெளியேறும் நிலை ஏற்பட்டது. ஆனால் கிரேட் நிகோபார் திட்டம் வந்தால் அவர்கள் நிரந்தரமாக வெளியேற்றப்பட்டு தங்களது கிராமங்களுக்கு திரும்புவது கனவாகவே மாறிவிடும் என்று எச்சரித்துள்ளார். பெரும் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தும் போது பழங்குடியினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற தெரிவித்துள்ள சோனியா காந்தி கிரேட் நிகோபார் திட்டம் சோம்பென்ஸ் மக்கள் வசிக்கும் பகுதிகளை அளிப்பதை தான் குறிக்கோளாக கொண்டுள்ளது என சாடியுள்ளார்.
குறிப்பாக தீவுக்கு சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரித்து இறுதியில் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்துவது தான் இந்த திட்டத்தின் நோக்கம் என்று அவர் விமர்சித்துள்ளார். இந்த திட்டம் குறித்து தேசிய பட்டியல் பழங்குடியினர் ஆணையத்துடன் கலந்தாலோசிக்கவும் இல்லை. பூர்வகுடி மக்களின் கருத்தை கேட்கவும் இல்லை என்றும் சோனியா காந்தி குற்றம் சாட்டியுள்ளார். பூர்வகுடிகளுக்கு மட்டும் இன்றி சுற்றுசூழலுக்கும் பேரழிவு காத்திருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இந்த திட்டத்துக்காக தீவின் 15% நிலத்தில் உள்ள மரங்களை வெட்ட வேண்டி இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் இதற்காக 32 லட்சம் முதல் 58 லட்சம் வரை மரங்கள் வெட்டப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ஏராளமான வன விலங்குகள் அழியும் நிலை ஏற்படும் என வேதனை தெரிவித்துள்ளார். கிரேட் நிகோபார் திட்டத்துக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.