இலங்கையில் கடந்த வாரம் வீசிய டிட்வா புயல், அந்த நாட்டில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2003ம் ஆண்டுக்கு பிறகு இலங்கையை தாக்கிய, மிக மோசமான புயல் இது என்றும் கூறப்படுகிறது. டிட்வா புயல் ஏற்படுத்திய பேரழிவில் 410 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் அதிகமானோர் இடம் பெயர்ந்துள்ளனர். 350க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர். இந்த புயல் காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது.
வீடுகள் மற்றும் அத்தியாவசிய உட்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளது. இடம் பெயர்ந்த குடும்பங்களில் குழந்தைகளும், முதியவர்களும் நோய்வாய்ப்பட்டுள்ளனர். ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் பாதுகாப்பற்ற சூழலை, இலங்கை மக்கள் எதிர்கொண்டுள்ளனர். அவர்களுக்கு பாதுகாப்பான நீர், உணவோடு அவசர உதவிகளை வழங்க வேண்டும். அதேபோல் உளவியல் ஆதரவுகளும் மிகவும் முக்கியமாகும் என்று யுனிசெப் அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைவாழ் மக்களுக்கு அத்தியாவசிய உதவிப்பொருட்கள், ஒன்றிய அரசுடன் இணைந்து வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன் அடிப்படையில் முதற்கட்டமாக 950 மெட்ரிக் டன் நிவாரணப்பொருட்கள், தமிழ்நாடு அரசு சார்பில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இலங்ைக துணை ஆணையர் கீதீஸ்வரன் கணேசநாதனிடம் இதனை முதல்வர் ஒப்படைத்தார்.
தொடர்ந்து சென்னை துறைமுகத்தில் இருந்து 650 மெட்ரிக் டன் நிவாரணப் பொருட்கள், இந்திய கடற்படைக்கு சொந்தமான கப்பலில் ஏற்றப்பட்டது. கொடி அசைத்து, அந்தக்கப்பலை முதல்வர் திரிகோணமலைக்கு அனுப்பி வைத்தார். இதேபோல் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து கப்பலில் ஏற்றப்பட்ட 300 மெட்ரிக் டன் நிவாரணப்பொருட்களும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்தவகையில் 300 மெட்ரிக் டன் சர்க்கரை, 300 மெட்ரிக் டன் பருப்பு, 25 மெட்ரிக் டன் பால்பவுடர், 25 மெட்ரிக் டன் கொண்ட 5000 வேட்டிகள், 5000 சேலைகள், 10,000 துண்டுகள், 10,000 போர்வைகள், 1000 தார்ப்பாலின்கள் நிவாரணப்பொருட்களாக இலங்கைக்கு சென்றுள்ளது.
டிட்வா புயலின் கோரத்தாண்டவம் இலங்கையில் நிகழ்ந்தவுடன் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், ‘‘டிட்வா புயலால் நம் அண்டை நாடான இலங்கை பேரழிவை சந்தித்துள்ளது. நூற்றுக்கணக்கான இறப்புகள் நிகழ்ந்துள்ளது. பல இடங்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, மக்கள் அவதியுற்று வருகின்றனர். இலங்கை மக்களின் பெரும் துயரில் தமிழகமும், தமிழக மக்களும் பங்கெடுக்கிறோம். டிட்வா புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ஒன்றிய அரசின் வாயிலாக உணவுப்ெபாருட்கள், மருந்து பொருட்களை தந்து உதவிக்கரம் நீட்ட தமிழக அரசு தயாராக உள்ளது. இதற்காக ஒன்றிய அரசுடன் இணைந்து செயல்பட அதிகாரிகள் குழு அமைக்க, தலைமை செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதன்படி இப்போது இலங்ைகக்கு உரிய நேரத்தில் நிவாரணப்பொருட்களை முதல்வர் அனுப்பி வைத்திருப்பது கவனம் ஈர்த்துள்ளது.
இது ஒரு புறமிருக்க 2019ம் ஆண்டு முதல் இலங்கையில் வறுமை தலைவிரித்தாடி வருகிறது. அங்கு ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த நாடு தற்போது மெல்ல, மெல்ல மீண்டு வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் டிட்வா புயலின் பெரும் சீற்றம் என்பது மக்களை நிலைகுலையச் செய்துள்ளது. இந்தச்சூழலில் தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் அனுப்பியுள்ள நிவாரணப் பொருட்கள், அங்குள்ள மக்களுக்கும், நமது சொந்தங்களுக்கும் பெரும் ஆறுதலை தரும் என்பதே நிதர்சனம்.


