மதுரை: மதுரை மாவட்டம், மேலூர், கீழவளவு, ஒத்தக்கடை, விக்கிரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதியை மீறி அளவுக்கு அதிகமாகவும், உரிய அனுமதியின்றி அரசு புறம்ேபாக்கு நிலங்களிலும் கிரானைட் கற்கள் வெட்டி எடுத்ததாக கடந்த 2011ல் புகார் எழுந்தது. இதுதொடர்பாக அப்போதைய கலெக்டர் சகாயம் கிரானைட் முறைகேடு மூலம் அரசுக்கு பல்லாயிரம் கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை அளித்திருந்தார்.
சென்னை ஐகோர்ட் உத்தரவின்படி சிறப்பு சட்ட ஆணையரும், விசாரணை அதிகாரியுமான சகாயம் தலைமையிலான குழுவினர், கிரானைட் முறைகேடு தொடர்பாக விசாரித்து அறிக்கை அளித்தனர். இக்குழு அறிக்கை அடிப்படையில் வழக்குகளின் விசாரணை மதுரையிலுள்ள கனிம வள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதில் ஏற்கனவே மதுரை மாஜி கலெக்டர் அன்சுல்மிஸ்ரா ஆஜராகி சாட்சியம் அளித்திருந்தார்.
இந்நிலையில் கிரானைட் முறைகேடு தொடர்பாக விக்கிரமங்கலம் மற்றும் ஒத்தக்கடை போலீஸ் தரப்பில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை நீதிபதி எஸ்.ரோகிணி முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியும், மதுரை மாஜி கலெக்டருமான சகாயம் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். பின்னர் அவரிடம் குறுக்கு விசாரணை நடந்தது. பின்னர் விசாரணையை நவ.4ம் தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.