12,480 கிராமங்களில் இன்று கிராமசபை கூட்டம் தெரு, சாலைகளில் சாதி பெயர் நீக்குவது தொடர்பாக தீர்மானம்: காணொலி காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்
சென்னை: தமிழகம் முழுவதும் 12,480 கிராமங்களில் இன்று நடக்கும் கிராம சபை கூட்டத்தில் தெருக்கள், சாலைகளில் உள்ள சாதி பெயர்களை நீக்குவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்று பேசுகிறார். இதுகுறித்து ஊரக வளர்ச்சி, ஊராட்சி துறை செயலாளர் மற்றும் ஊடக செயலாளர் ககன்தீப் சிங் பேட்டி நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 6 முறை கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுகிறது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று (11ம் தேதி) 12,480 கிராமங்களில் கிராம சபை கூட்டம் நடக்கிறது. கூட்டத்தில் 3 முக்கிய கோரிக்கைகள், அதுவும் உடனடியாக நிறைவேற்றக்கூடிய பணிகள் குறித்து விவாதிக்கப்படுகிறது. உதாரணமாக, இந்த தெருக்களில் இன்னும் தண்ணீர் சப்ளை வரவில்லை, இன்னும் மேம்படுத்த வேண்டிய சூழ்நிலை குறித்தும், தெருவிளக்குகள் எங்கெங்கு தேவையாக இருக்கிறது, எந்தெந்த பகுதிகளில் குப்பை சேகரிப்பு பணிகள் தொடங்க வேண்டும் என்பது குறித்தும் மக்கள் கோரிக்கையாக கிராம சபை கூட்டத்தில் தெரியப்படுத்தலாம். இதுதவிர, சாலைகள் போடுவது மற்றும் பேருந்து தேவை உள்ளிட்ட இதர தேவைகள் குறித்தும் விவாதிக்கப்படும்.
இதுபோன்ற கோரிக்கைகள் இன்று நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானமாக போட்டு ஊராட்சி செயலருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மாவட்ட கலெக்டர் தலைமையில் கூட்டம் நடத்தப்படும். கிராம சபை கூட்டத்தில் கூறப்படும் கோரிக்கைகள் இன்று மாலையே அரசின் இணையத்தில் பதிவு செய்து ‘நம்ம ஊரு நம்ம அரசு’ என்ற பெயரில் குறைந்தபட்ச காலத்திற்குள், குறிப்பாக அத்தியாவசியமான 3 கோரிக்கைகள் இந்த மாதத்திற்குள் நிறைவேற்றி தரப்படும். இரண்டாவதாக, இழிவுபடுத்தும் ெபாருள் தரும் சாதிப் பெயர்கள் கொண்ட குடியிருப்புகள், தெருக்கள், சாலைகள், நீர்நிலைகள் மற்றும் பிற பொது உட்கட்டமைப்புகள் போன்றவற்றின் பெயரை மாற்றுதல் குறித்து கிராம சபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். குறிப்பாக சாதிப் பெயர் இருந்தால் கண்டிப்பாக பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. உதாரணமாக, ஆதிதிராவிடர் காலனி, ஹர்ஜன் குடியிருப்பு, வண்ணாங்குளம், பறையர் தெரு, சக்கிலியர் தெரு என பெயர் கொண்ட தெரு மற்றும் சாலைகளின் பெயர்கள் நீக்க இன்று நடைபெறும் கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்படும்.
இதற்கு பதில் பூக்கள், தலைவர்களின் பெயர்கள் உள்ளிட்ட பொதுவான பெயர் வைக்க மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது. சாதிப் பெயர்கள் மாற்றப்பட வேண்டியவை தொடர்பாக கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்படும். இதனை பரிசீலனை செய்து அரசு இறுதி முடிவு எடுக்கும். கிராமங்களில் ஏழ்மையான குடும்பங்களுக்கு அரசு எப்போதும் உதவி செய்து வருகிறது. கிராமங்களில் உள்ள மிக ஏழ்மையான குடும்பங்களை கிராம சபை மூலமாக தேர்வு செய்து தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் மூலமாக நலிவுநிலை குறைப்பு நிதி கொடுத்து அவர்களது வாழ்வாதார மேம்பாட்டுக்காக முன்னுரிமை பட்டியல் தயார் செய்து கிராம சபையில் ஒப்புதல் பெறப்படும். பின்னர் இதற்கென தயாரிக்கப்பட்ட நலிவுநிலை குறைப்பு திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்படும். ஏழ்மை குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஜீரோ முதல் 4 சதவீதம் வட்டியுடன் கடன் வழங்கப்படும். இதுபற்றியும் இன்று நடைபெறும் கிராம சபையில் முடிவு செய்யப்படும்.
மேலும், கிராம சபைக் கூட்டத்தில் ஊராட்சி மன்றத்தின் நிதி, வரவு-செலவு மற்றும் தணிக்கை அறிக்கைகள் விவாதிக்கப்படும். தூய்மை பாரத இயக்கம் திட்டம், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை, கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும். கிராமப்புற மக்கள் தங்களின் உரிமைகளை அறிந்திடவும் தேவைகளை கோரி பெறுவதற்காகவும் கிராம சபைக் கூட்டம் நடக்கிறது. ஒரு ஆண்டில் 6 முறை கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் இன்று நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகிறார். பைபர் நெட் இணைப்பை பயன்படுத்தி மாநிலம் முழுவதும் உள்ள 10,000 கிராம பஞ்சாயத்துகளில் பேசுவது நேரலையாக ஒளிபரப்பாகும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் கார்த்திகேயன் உடனிருந்தார்.