Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்டு 15ல் கிராம சபை கூட்டம்: தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னை: அனைத்து கிராம ஊராட்சிகளிலும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் பொன்னையா சென்னை நீங்கலாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: சுதந்திர தினத்தன்று (வருகிற 15ம் தேதி) காலை 11 மணியளவில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். கிராம சபை கூட்டங்களை மதச்சார்புள்ள எந்தவொரு வளாகத்திலும் நடத்த கூடாது. கிராம மக்கள் அனைவரும் பங்கேற்கும் வகையில் நடைபெறும் இடம், நேரத்தை மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும். 1-4-2024 முதல் 31-7-2024 முடியவுள்ள காலத்தில் கிராம ஊராட்சியின் பொது நிதியில் இருந்து மேற்கொண்ட செலவின அறிக்கை விவரங்களை கிராம சபை கூட்டத்தில் படித்து காண்பித்து ஒப்புதல் பெற வேண்டும்.

தூய்மையான குடிநீர் விநியோகம், வரி செலுத்தும் சேவை, இணைய வழி மனை பிரிவு, கட்டிட அனுமதி, சுய சான்றிதழ் அடிப்படையில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு உடனடி பதிவின் மூலம் அனுமதி வழங்குதல் உள்ளிட்டவை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்க வேண்டும். மேலும், ஊரக பகுதிகளில் ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றை அடிப்படையாக கொண்டு கட்டிட அனுமதி பெறும் வகையில் ஒருங்கிணைக்கப்பட்ட நடைமுறை தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2500 சதுர அடிக்கு குறைவான மனைப்பரப்பில் 3,500 சதுர அடி வரை தரைத்தளம் அல்லது தரை மற்றும் முதல் தளம் கொண்ட 2 குடியிருப்பு வரை உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் சுய சான்றின் அடிப்படையில் அனுமதி வழங்கப்படுகிறது. இதுகுறித்து கிராம சபை கூட்டத்தில் தெரிவிக்க வேண்டும்.

தமிழ்நாடு எளிமைப்படுத்தப்பட்ட ஊராட்சி கணக்கு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், தூய்மை பாரத இயக்கம், ஜல்ஜீவன் திட்டம் உள்ளிட்டவை தொடர்பாகவும், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், அரசு பொது கட்டிடங்கள் அனைத்திலும் குழாய் இணைப்புகள் மூலம் தூய்மையான குடிநீர் விநியோகம் செய்யப்படுவதை உறுதி செய்வது உள்ளிட்டவை குறித்தும் விரிவான ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.