அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்காக கொடைக்கானல் வந்த ஆளுநருக்காக சாலையில் காக்க வைக்கப்பட்ட பள்ளி மாணவர்கள்
திண்டுக்கல்: கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தின் 32 வது பட்டமளிப்பு விழாவிற்காக இன்று தமிழக ஆளுநர் ஆர் என் ரவி சாலை மார்க்கமாக கொடைக்கானல் வந்தடைந்தார். ஆளுநரின் வருகையை முன்னிட்டு கொடைக்கானல் மலை பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பெருமாள் மலை பகுதியை வந்தடைந்த உடன் கொடைக்கானல் நகரம் முழுவதும் போக்குவரத்து ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் காத்திருந்தனர்.
மேலும் பள்ளி முடிந்து மாணவ மாணவிகள் வீடு திரும்பும் நேரத்தில் ஆளுநரின் வருகைக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் முக்கிய சாலைகளான ஏரி சாலை, மூஞ்சிகல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பள்ளிகளில் பயின்று வரும் மாணவ மாணவிகள் ஆளுநரின் வருகைக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
தொடர்ந்து ஆளுநர் கொடைக்கானலில் உள்ள தனியார் விடுதியில் இன்று இரவு தங்குகிறார், நாளை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறக்கூடிய பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று 325 மாணவிகளுக்கு நேரடியாக பட்டங்களை வழங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
