பட்டதாரி ஆசிரியர் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பள்ளி கல்வி செயலாளர், நிதித்துறை செயலாளருக்கு நோட்டீஸ்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு பகுதியை சேர்ந்த ஆசிரியர் தேவராஜூலு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், அத்திமஞ்சேரிப்பேட்டை திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை தெலுங்கு ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். சிறுபான்மை மொழிகளுக்கான ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வை, தமிழக அரசு 2003ம் ஆண்டு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்று அதே ஆண்டு ஆகஸ்ட் 14ல் தெலுங்கு மொழி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். இந்த நிலையில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து 2003 ஆகஸ்ட் 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இந்த அரசாணை அதே ஆண்டு ஏப்ரல் 1 முதல் அதாவது முன் தேதியிட்டு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்தது.
இதனால், என் பெயர் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டது. இந்த அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பே தேர்வு நடவடிக்கை தொடங்கப்பட்டதால் என்னை பழைய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பழைய ஓய்வூதிய திட்டத்தில் பெயரை சேர்க்க வேண்டும் என்று 2023ல் ஆண்டு இந்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மனுதாரரின் கோரிக்கை மனுவை பரிசீலித்து இரண்டு வாரங்களுக்குள் தகுந்த முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று 2024 அக்டோபரில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை அமல்படுத்தாததால் பள்ளி கல்வி துறை செயலர், நிதி துறை செயலர் ஆகியோருக்கு எதிராக தேவராஜுலு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முபு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, பள்ளி கல்வி துறை செயலர் சந்திர மோகன் ஐ.ஏ.எஸ்., நிதி துறை செயலர் உதயசந்திரன் ஐ.ஏ.எஸ்., அக்கவுண்ட் ஜெனரல் அனிம் செரியன் ஆகியோர் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.