சென்னை: எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்னை தரமணியில் அமைந்துள்ள தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ரூ.5.09 கோடி செலவில் முழு அளவில் புனரமைக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத்தளத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 25ம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் ஒப்பனை அறைகள், அலங்கார உடை அறை, உணவு அருந்தும் அறை ஆகியவை இணைந்த குளிர்சாதன வசதியுடன் கூடிய சுமார் 17,517 சதுர அடியில் அமைந்துள்ள இந்த படப்பிடிப்புத்தளம் திரைப்படத்துறையினருக்கு மிகுந்த பயனளிக்கும். மேலும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் உள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புக்கான கட்டணங்களை கீழ்க்கண்டவாறு அரசு நிர்ணயித்து ஆணையிடப்பட்டுள்ளது.
மேற்படி படப்பிடிப்பு கட்டணங்களை வசூலிப்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகள் பின்வருமாறு: இவ்வளாகத்தில் நடைபெறும் படப்பிடிப்புக்கான அனுமதி, இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை தலைமைச்செயலகம், சென்னை -9 அவர்களிடமிருந்து பெறப்பட வேண்டும். தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம், தரமணி, சென்னை -113 படப்பிடிப்பு கட்டணங்களை முதல்வர் (மு.கூ.பொ)அவர்கள் வசூலிப்பார். குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்திற்கான முன்வைப்புத் தொகை ரூ.20,000/- வசூலிக்கப்படும். படப்பிடிப்பு முடிந்த பின், விதிமுறைகளுக்கு உட்பட்டு முன்வைப்புத் தொகை திரும்ப வழங்கப்படும்.
அட்டவணையின்படி, ஒவ்வொரு கால்ஷீட்டுக்கும் 12 மணிநேரம் எனப் படப்பிடிப்புக்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன வளாகத்தில் அமைந்துள்ள குளிர்சாதன வசதியுடன் கூடிய படப்பிடிப்புத் தளத்தில் படப்பிடிப்பு நடத்த விரும்பும் திரைப்படத் துறையினர், சின்னத்திரை மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியோர் இயக்குநர்,செய்தி மக்கள் தொடர்புத்துறை அவர்களிடம் முன்அனுமதி பெற்று, அரசால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தி, உரிய அனுமதியுடன் இவ்வசதிகளை பயன்படுத்தலாம் என தெரிவித்துக்கொள்ளப்படுள்ளது.