கும்மிடிப்பூண்டி: கே.எல்.கே. அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் 3ம் ஆண்டு சந்திப்பு விழாவில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற 7 மாணவ மாணவிகளுக்கு ஊக்கதொகை, பரிசு மற்றும் கேடயம் வழங்கினர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சில ஆண்டுகளுக்கு முன்பு அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளி வளர்ச்சிக்கும் மாணவர்களின் வளர்ச்சிக்கும் பங்கேற்க வேண்டும் என அழைப்புதல் கொடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி கே.எல்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் பல முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பள்ளிக்கு வண்ணம் பூசுதல், கேமரா பொருத்துதல், இருக்கைகள் வாங்கி கொடுத்தல், பள்ளி மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, மற்றும் ஏழை எளிய மாணவர்கள் மேல்படிப்புக்கு கல்வி கட்டணம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை முன்னாள் மாணவர்கள் செய்து வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக கே.எல்.கே. அரசுப் பள்ளியில் 1987ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து 3வது ஆண்டாக சந்திப்பு விழா நடைபெற்றது.
இதற்கு முன்பாக முதலாம் ஆண்டில் ரூ.50,000 மதிப்புள்ள கணினி மற்றும் உதிரி பாகங்கள் வழங்கினர். மேலும், 2ம் ஆண்டு சந்திப்பில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியும் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கினர். 3ம் ஆண்டாக நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓய்வு பெற்ற முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணி தலைமை தாங்கினார்.
முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் ரகு, செயலாளர் கே. பிரகாஷ், பொருளாளர் டி.கே.பத்மநாபன், ஏ.வி.எஸ்.மணி, ராகவரெட்டிமேடு ரமேஷ், தொழிலதிபர் முனிராஜ் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து, 2024ம் ஆண்டு பத்தாம் வகுப்பில் முதல் மூன்று இடம் பிடித்த 7 மாணவ மாணவிகளுக்கு நேற்றுமுன்தினம் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணியம் ஊக்கத்தொகை பரிசுகளையும், கேடயத்தையும் வழங்கினார்.
இதில் 1987ம் ஆண்டு 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு விழாவை சிறப்பாக நடத்தினர். இதேபோன்று கும்மிடிப்பூண்டி, சுண்ணாம்புகுளம், எளாவூர், மாநெல்லூர், கவரப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த அரசு உயர்நிலைப்பள்ளி, அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படித்த முன்னாள் மாணவர்கள் தொடர்ந்து வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் எனவும் ஏழை எளிய மாணவர்களை கண்டறிந்து அவர்கள் திறமைக்கேற்ப மேற்படிப்புக்கு உதவ வேண்டுமென ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணி கூறினார்.