Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செங்குன்றம் வடகரை பகுதியில் அரசு கல்லூரி துவங்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

புழல்: செங்குன்றம் அருகே வடகரை பகுதியில் அரசு கல்லூரி தொடங்க வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர். செங்குன்றம் அடுத்த வடகரை பகுதியில் அரசு ஆதிதிராவிடர் நலத்துறை ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள், அரசு தொழிற்பயிற்சி நிலையம், மகளிர் விடுதி என சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் ஒரே வளாகத்தில் உள்ளது. சுமார், 80 ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பள்ளியாக தொடங்கப்பட்டு, படிப்படியாக மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

இந்த பள்ளியில் புழல், மாதவரம், செங்குன்றம், பாடியநல்லூர், பம்மதுகுளம், பொத்தூர், கும்மனூர், அலமாதி, வடபெரும்பாக்கம், கொசப்பூர், விச்சூர், நல்லூர், விஜயநல்லூர், ஆங்காடு, அருமந்தை, பெருங்காவூர், விளாங்காடுபாக்கம், வடகரை, புள்ளிலைன், தீர்த்தங்கரையம்பட்டு உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் நடந்தே சென்று படித்து வந்த காலம்போய், தற்போது பல்வேறு இடங்களில் பஸ் வசதி உள்ளதால், தற்போது சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த, பள்ளியில் படித்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர், மருத்துவர், பொறியாளர், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளனர். குறிப்பாக, தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் தலைவராக உள்ள அமல்ராஜ் இப்பள்ளியில் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் அரசு மேல்நிலைப்பள்ளிகள் உருவாக்கப்பட்ட நிலையில் அந்தந்த பகுதி சார்ந்தவர்கள் உள்ளூரிலே படித்து வருகின்றனர்.

மேல்படிப்புக்காக குறிப்பாக அரசு கல்லூரிகளுக்கு படிக்க செல்ல வேண்டுமென்றால் 15 கிலோமீட்டர் தூரமுள்ள சென்னை வியாசர்பாடி, அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரிக்கும், 20 கிலோ மீட்டர் தூரம் உள்ள பொன்னேரி அரசு கலைக்கல்லூரிக்கும் மற்றும் மருத்துவம் சார்ந்த செவிலியர் படிப்புக்கு செல்ல வேண்டும் என்றால் சென்னைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால், பல்வேறு கிராமங்களில் உள்ள பிளஸ் 2 படித்து முடித்த மாணவ, மாணவிகள் வெளியில் சென்று படிக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

எனவே, போதுமான இடவசதி உள்ள வடகரை பகுதியில் அரசு கலைக்கல்லூரி அல்லது செவிலியர் பயிற்சி மையம் தொடங்கினால் மேற்கண்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் படிக்க ஏதுவாக இருக்கும். இதுகுறித்து, தமிழக சட்டமன்றத்தில் மாதவரம் எம்எல்ஏ சுதர்சனம் கோரிக்கை வைத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலமாக அரசு கல்லூரி கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.