சென்னை: கிண்டி ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால், அனைத்து அதிகாரப்பூர்வ தொடர்பு மற்றும் பணிகளுக்காக ஆளுநர் அலுவலகம் “மக்கள் மாளிகை” என மறுபெயரிடப்படும் என்று முறைப்படி அறிவிக்கப்பட்டபடி, “ராஜ்பவன் தமிழ்நாடு” என்பது ‘‘மக்கள் மாளிகை தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்யப்படுகிறது.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த பெயர் மாற்றம், ஆளுநர் மாளிகை “மக்கள் மாளிகை” ஆகப் பரிணாமம் அடைவதை பிரதிபலிக்கிறது. மேலும், இது மக்களை மையப்படுத்தப்பட்ட நல்லாட்சி மற்றும் அதன் திட்டங்கள் மற்றும் முன்முயற்சிகளில் பொதுமக்களின் பங்களிப்பு ஆகியவற்றில் நீண்டகாலமாக உள்ள உறுதிப்பாட்டினை முன்னெடுத்துச் செல்கிறது.
இது, இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம், நாகரிக விழுமியங்கள் மற்றும் அரசியலமைப்பின் உணர்வை நிலைநிறுத்துவதற்கான தற்போதைய பயணத்தில் ஒரு அர்த்தமுள்ள முன்னேற்றத்தைக் குறிக்கிறது. மேலும், இந்த அலுவலகம் தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகளின் எண்ணங்களை தொடர்ந்து பிரதிபலிப்பதை உறுதிசெய்கிறது. இந்த பெயர் மாற்றம் உடனடியாக அமலுக்கு வருகிறது. இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

