சென்னை: தலைமை செயலகம் மற்றும் கவர்னர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை தலைமை செயலகம் வாரத்தின் முதல் நாளான நேற்று காலை முதலே பரபரப்பாக காணப்பட்டது. அப்போது திடீரென அலுவலகத்திற்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில், பேசிய நபர் சற்று நேரத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என கூறி இணைப்பை துண்டித்துவிட்டார். இதுகுறித்து உடனே ஊழியர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்தனர்.
அதன்படி, வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களுடன் தலைமை செயலகம் முழுவதும் ஒரு மணி நேரத்திற்கு மேல் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, ஊழியர்கள் அனைவரும் சிறிது நேரம் வெளியேற்றப்பட்டனர். ஒரே நேரத்தில் ஊழியர்கள் அனைவரும் வெளியேறியதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. இந்த சோதனையில் எந்த ஒரு வெடிகுண்டும் சிக்கவில்லை. இதனால் மிரட்டல், புரளி என்று தெரியவந்தது. இதுகுறித்து கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை சைபர் க்ரைம் போலீசார் உதவியுடன் தேடி வருகின்றனர்.
இதேபோல் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கும் மர்ம நபர் தொடர்பு கொண்டு வெடி குண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து, போலீசார் கவர்னர் மாளிகை முழுவதும் தீவிர சோதனை நடத்தினர். அங்கேயும் எதுவும் சிக்காததால், மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்தது. இதுகுறித்து கிண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாஜ தலைமை அலுவலகத்திற்கு நேற்று முன்தினம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக மாம்பலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த 2 நாட்களாக அடுத்தடுத்து இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.