Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்ள முடியாது : உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு காட்டம்

டெல்லி : மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசு தலைவருக்கும் ஆளுநருக்கும் எந்த தனி அதிகாரமும் இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தெரிவித்துள்ளது. மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல், இழுத்தடிக்கும் ஆளுநர்களுக்கு எதிரான வழக்கில் குடியரசு தலைவர் மூலம் உச்சநீதிமன்றத்திற்கு கேள்வி எழுப்பிய ஒன்றிய அரசின் மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா மற்றும் கேரள அரசுகள் சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

மசோதாக்களை நிறுத்தி வைக்க குடியரசுத் தலைவருக்கும், ஆளுநர்களுக்கும் எந்த தனி அதிகாரமும் இல்லை. அரசுடன் நெருங்கிய உறவு வைத்துள்ள ஆளுநர்கள் உடனடியாக மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்குகின்றனர். மற்ற மாநிலங்களில் ஒப்புதல் வழங்குவதில்லை. மசோதாக்களுக்கு ஆளுநர்கள் உடனடியாக ஒப்புதல் வழங்காததால், நீதிமன்றத்தை நாட வேண்டி உள்ளது. ஒன்றிய அமைச்சரவை முடிவுபடி எப்படி குடியரசு தலைவர் செயல்படுகிறாரோ, அதேபோல், மாநில அமைச்சரவைகளின் முடிவுப்படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்பதுதான் விதி. மசோதா நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை ஆளுநர்கள் தெரிவிக்க வேண்டும்.

அது நீதித்துறை ஆய்வுக்கு உட்பட்டது. சட்டமன்றத்தின் செயல்பாட்டை ஆளுநர்கள் சீர்குலைக்க முடியாது. ஆளுநர் சட்டமன்றத்துக்கு எதிராக செயல்பட முடியாது. ஆளுநர்கள் கோபுரத்தில் உட்கார்ந்து கொண்டு மசோதாவை படிக்க பல மாதங்கள் எடுத்துக் கொள்ள முடியாது."இவ்வாறு தெரிவித்தார். இதையடுத்து, “குடியரசுத் தலைவர் மசோதாவை திருப்பி அனுப்பும் போது, நாடாளுமன்றம் மறுநிறைவேற்றம் செய்து மீண்டும் அனுப்பினால் அதை கிடப்பில் போட முடியாது, ஒப்புதல் கொடுத்தேதான் ஆக வேண்டும். அதே வழிமுறைதானே ஆளுநருக்கும் உள்ளது?” என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.