Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பு ஜனாதிபதியின் 14 கேள்விகளுக்கு பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் நோட்டீஸ்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மசோதாக்களுக்கு அனுமதி அளிக்க ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்த விவகாரத்தில், ஜனாதிபதி முர்மு எழுப்பியுள்ள 14 கேள்விகளுக்கு பதிலளிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் மாநில ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தொடர்ந்து அனைத்து விவகாரத்திலும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

இந்த நிலையில் சட்டப்பேரவை மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம், மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது. தமிழ்நாட்டை போன்றே மசோதா விவகாரத்தில் ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாப், கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தொடந்துள்ள வழக்குகள் தற்போது வரையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி அனுப்பி இருந்தார். அதில், ‘‘ஆளுநர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா?. அதேப்போன்று குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோசனை பெற அரசியலமைப்பின் 143வது பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரங்கள் தான் குடியரசுத் தலைவர் தரப்பில் இருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இந்த விவகாரத்தில் அரசியலமைப்பே காலக்கெடுவை நிர்ணயிக்காதபோது, உச்ச நீதிமன்றம் எவ்வாறு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை நிர்ணயிக்க முடியும்?. இந்த விவகாரத்தில் தெளிவான விளக்கத்தை தரும் விதமாக, தலைமை நீதிபதி தரப்பில் இருந்து உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வை அமைக்க ஆலோசனை நடத்தி தெரிவிக்க வேண்டும்.

இந்த விவகாரத்தில் குடியரசு தலைவர் தரப்பின் முக்கிய கேள்வியாக இருப்பது என்னவென்றால் அரசியலமைப்பின் கீழ் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் என்னென்ன, மேலும் 142வது பிரிவின் கீழ் உச்ச நீதிமன்றம் எவ்வாறு அதன் சொந்த அதிகாரங்களுடன் அதனை மாற்ற முடியும். ஒன்றிய அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் முழுமையான அதிகாரத்தை மாநிலங்கள் துஷ்பிரயோகம் செய்கின்றனவா, குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடுவை உச்ச நீதிமன்றம் எவ்வாறு நிர்ணயிக்க முடியும். பிரிவு 200ன் கீழ் ஆளுநரின் முடிவுகள் என்ன. மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் அரசியல்சானத்தின் வழிமுறைகள் என்ன, சட்டப்பிரிவு 142இன் கீழ் உச்ச நீதிமன்றம் அசாதாரண அதிகாரங்களை எப்படி பயன்படுத்துகிறது. அவ்வாறு செயல்பட முடியுமா?. மேலும் மசோதாக்கள் மீது முடிவெடுக்கும் ஆளுநரின் அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 200ஐ நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியாத வகையில், அரசியலமைப்பு பிரிவு 361 பாதுகாப்பு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றம் அதனை கருத்தில் கொண்டதா?.

குறிப்பாக அரசில்சாசன பிரிவு 200ன் கீழ் ஆளுநரின் விருப்புரிமை என்பது நியாயமான ஒன்றா?. அரசியல் சாசனபிரிவு 201ன் கீழ் குடியரசுத் தலைவர் விருப்புரிமையைப் பயன்படுத்துவது நியாயமானதா?. உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியல்சாசன பிரிவு 142ஐ பயன்படுத்தி குடியரசு தலைவர், ஆளுநர்களின் உத்தரவுகளை எப்படிப்பட்ட முறையில் மாற்ற செய்ய முடியும். அது எவ்வாறு சாத்தியமாகும். உச்ச நீதிமன்றம் தனிப்பட்ட அதிகாரமான அரசியலமைப்பு பிரிவு 142 நடைமுறை சட்டவிதிகளுக்கு மட்டும் பயன்படுத்த முடியுமா?, அல்லது நடைமுறை விதிகளுக்கு முரண்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கவும் அதற்கு அதிகாரம் உள்ளதா?, ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் மாநில சட்டமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தை அந்த அரசுகள் நடைமுறைப் படுத்தமுடியுமா என்பது உட்பட இத்தனை கேள்விகள் அதில் இடம்பெற்று இருந்தது.

இந்த நிலையில் மேற்கண்ட விவகாரம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி ஆர் காவாய் மற்றும் நீதிபதிகள் சூரியகாந்த் ,விக்ரம் நாத் ,நரசிம்மா மற்றும் ஏ.எஸ். சந்துருகர் ஆகியோர் அடங்கிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமர்வின் முன்பாக இந்த விவகாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் இந்த விவகாரத்தை ஆகஸ்ட் மாதம் விசாரிக்கலாம் என்று இருக்கிறோம். ஆனால் அதற்கு முன்பாக அனைத்து மாநில அரசுகளின் கருத்துகளையும் கேட்க உச்ச நீதிமன்றம் விரும்புகிறத்கு.

எனவே அனைத்து மாநில அரசுகளும் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவு பிறப்பித்ததோடு, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு உதவுமாறு ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சொலிசிட்டர் ஜெனரல் ஆகியோரை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர். கேரள அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கே கே வேணுகோபால் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்ட விவகாரத்தை இவ்வாறு விசாரிக்க வேண்டிய தேவை இருக்கிறதா என்பதை முதலில் பார்க்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், குடியரசுத் தலைவர் கேட்டிருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் முன்னதாக தமிழக அரசு மாநில ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் எட்டாம் தேதி வழங்கிய தீர்ப்பிலேயே பதில் அளித்துள்ளோம் என கூறினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், இந்த விவகாரம் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களை மட்டுமே சார்ந்த விஷயம் கிடையாது. அனைத்து மாநிலங்களும் தொடர்புடைய விவகாரம். அதனால் ஒட்டுமொத்த நாட்டின் நிலைப்பாடு மற்றும் அரசியல் சாசனம் குறித்து நாங்கள் விரிவாக பார்க்க வேண்டியிருக்கிறது. எனவே குடியரசு தலைவர் எழுப்பிய கேள்விகளுக்கு நிச்சயம் இந்த நீதிமன்றம் பதில் கூறும் என திட்டவட்டமாக கூறிய நீதிபதிகள் வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.