தமிழ்நாடு குறித்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் ஆளுநர் ரவி: செல்வப்பெருந்தகை கண்டனம்!
சென்னை: தமிழ்நாடு குறித்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை ஆளுநர் ரவி முன்வைக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது; ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்த தவறான மற்றும் பொறுப்பற்ற கருத்துக்களை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழ்நாடு குறித்து உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, மாநிலத்தின் ஒற்றுமையையும் சமூக அமைதியையும் பாதிக்கக்கூடிய வகையில் தொடர்ந்து கருத்துக்களை பேசி வரும் ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களின் சமீபத்திய பேட்டி எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
'தமிழ்நாடு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது', 'தமிழ்நாட்டில் பீகாரிகள் அச்சுறுத்தப்படுகின்றனர்', 'மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன' என்ற அவரது கூற்றுகள் அனைத்தும் ஆதாரமற்றதும் அரசியல் உள்நோக்கத்துடனும் முன்வைக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு ஆகும். தமிழ்நாடு என்பது மொழி, மதம், இன வேறுபாடில்லாமல் அனைவருக்கும் பாதுகாப்பையும் வாய்ப்புகளையும் வழங்கும் முன்னேறிய மாநிலம். இங்கு வாழும் வட மாநில தொழிலாளர்கள் கூட 'நாங்கள் நன்றாக நடத்தப்படுகிறோம்; எந்த அச்சுறுத்தலும் இல்லை' என்று அரசு குழுவிடம் சாட்சியமளித்த நிலையிலும், ஆளுநரின் நேர்மறையற்ற குற்றச்சாட்டுகள் அனைத்தும் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டு மக்களின் மாண்புகளை சிதைக்கும் செயலாகும்.
ஆளுநராக பதவியேற்றவர், அரசியல் பிரச்சார பேச்சுகளை மீண்டும் மீண்டும் செய்து, தமிழ் சமூகத்தை குறைகூறுவது முற்றிலுமாக ஏற்க முடியாதது. தமிழ்நாட்டின் உண்மையான வரலாறையும், பண்பாட்டையும், ஜனநாயகத்தையும், மொழி ஒற்றுமையையும் அவமதிக்கும் எந்த கருத்தையும் தமிழ்நாடு மக்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். தமிழ்நாட்டை இழிவுபடுத்தும், மாநிலத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் ஆளுநரின் இந்த உண்மைக்குப் புறம்பான மற்றும் பொறுப்பற்ற பேச்சுகளை மீண்டும் ஒருமுறை வன்மையாகக் கண்டிக்கின்றேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


