ஆளுநர் ஆர்.என்.ரவி தேநீர் விருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி உள்ளிட்ட தலைவர்கள் புறக்கணிப்பு: நயினார் மட்டும் பங்கேற்பு, பெயருக்கு ஆட்களை அனுப்பிவைத்த அதிமுக, தேமுதிக
சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று மாலை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் புறக்கணித்தனர். நயினார் நாகேந்திரன் மற்றும் அதிமுக, தேமுதிக கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மட்டுமே விருந்தில் கலந்து கொண்டனர். ஒவ்வோர் ஆண்டும் சுதந்திர தினத்தையொட்டி, அரசியல் கட்சிகளுக்கு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் மாலை தேநீர் விருந்து வழங்குவது வழக்கம்.
இந்த ஆண்டும், சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை கிண்டி ராஜ்பவனில் தேநீர் விருந்து ஏற்பாடு செய்தார். இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், அரசு அதிகாரிகள், முன்னாள் ராணுவத்தினர், சுதந்திரப் போராட்ட தியாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அதன்படி, நேற்று மாலை 6 மணிக்கு தேநீர் விருந்து தொடங்கியது.
ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அவரது மனைவி ஆகியோர் விருந்துக்கு வந்திருந்த ஒவ்வொருவர் இருக்கைக்கும் சென்று வணக்கம் தெரிவித்து வரவேற்றார். இந்த தேநீர் விருந்தில் தமிழக அரசு சார்பில் தலைமை செயலாளர் முருகானந்தம், டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை மாநகர போலீஸ் ஆணையர் அருண் ஆகியோர் பங்கேற்றனர். உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா, அதிமுக சார்பில் இன்பதுரை, மரகதம் குமரவேல், பாஜ சார்பில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்,
தமிழிசை சவுந்தரராஜன், எச்.ராஜா உள்ளிட்டோரும், பாமகவில் அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் சிவக்குமார், வெங்கடேசன், தேமுதிக சார்பில் விஜயபிரபாகரன், பார்த்தசாரதி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், ஐக்கிய ஜனதா கட்சி பாரிவேந்தர் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் போக்கிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆளுநர் மாளிகையில் நேற்று ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கிய தேநீர் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்காமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணித்தார். அதேபோன்று திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிய கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.
இந்த கட்சிகள் சார்பாக யாரும் தேநீர் விருந்தில் பங்கேற்கவில்லை. மேலும், இந்த விருந்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை. மேலும் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் அல்லது இரண்டாம் கட்டத் தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர்களும் கலந்து கொள்ளவில்லை. அதேபோல, பாஜ சார்பில் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.