ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டத்தை வாங்க மறுத்த மாணவி.. தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஆளுநர் செயல்படுவதாக குற்றச்சாட்டு!!
திருநெல்வேலி : திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பட்டத்தை வாங்காமல் மாணவி புறக்கணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் இன்று 32வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள வ.உ. சிதம்பரனாா் கலையரங்கில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவுக்கு தலைமை வகித்த தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி, 759 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது, நாகர்கோவிலைச் சேர்ந்த ஜீன் ஜோசப் என்ற மாணவி, ஆளுநர் ரவியிடம் இருந்து பட்டம் வாங்காமல், பல்கலைக்கழக துணைவேந்தா் என். சந்திரசேகரிடம் பட்டம் பெற்றதால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. அருகில் வந்து நிற்குமாறு, ஆளுநர் ரவியின் அழைப்பையும் மாணவி புறக்கணித்தார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய மாணவி, ”தமிழ்நாட்டுக்கும் தமிழக மக்களுக்கும் எதிராக தமிழக ஆளுநர் செயல்பட்டு வருவதால் நான் அவரிடம் இருந்து பட்டம் பெறுவதை விரும்பாமல் துணை வேந்தரிடம் பட்டம் வாங்கினேன். எனக்கும் அவருக்கும் எந்தவித ஒரு தனிப்பட்ட பிரச்னையும் கிடையாது. திராவிட மாடலை நான் விரும்புகிறேன். தமிழக மக்களுக்கு எதிராக செயல்படுவதால் நான் இவ்வாறு செய்தேன்” என்று தெரிவித்தார்.