கவர்னர் மாளிகையில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் தண்டனை நீதிபதி மீது செருப்பு வீச முயன்ற கருக்கா வினோத்: சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் பரபரப்பு
சென்னை: ரவுடி கருக்கா வினோத் சென்னை 6வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி மீது செருப்பை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி கவர்னர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. இந்நிலையில் தி.நகரில் உள்ள டாஸ்மாக் கடை ஒன்றில் அடிதடியில் ஈடுபட்ட கருக்கா வினோத் அந்த கடை மீது பெட்ரோல் குண்டு வீசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை ஆஜர்படுத்துவதற்காக போலீசார் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 6வது கூடுதல் நீதிமன்றத்திற்கு நேற்று அழைத்து வந்தனர்.
நீதிபதி பாண்டியராஜ் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட கருக்கா வினோத், கவர்னர் மாளிகை வழக்கில் தமக்கு அதிகபட்ச தண்டனை அளிக்கப்பட்டுள்ளதாக முழக்கமிட்டவாறு தனது செருப்பை கழட்டி நீதிபதியை நோக்கி வீச முயன்றார். இதை பார்த்து உடனடியாக சுதாரித்துக்கொண்ட போலீசார் கருக்கா வினோத்தை மடக்கி பிடித்து அவரை எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், அவரை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.
திடீரென்று நடந்த இந்த சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து நீதிபதி, இதுபோன்ற குற்றவாளிகளை நேரடியாக நீதிமன்றத்திற்கு அழைத்து வராமல் காணொலி மூலம் ஆஜர்படுத்துமாறு காவல்துறைக்கு அறிவுறுத்தினார். ஏற்கனவே, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ஒருவர் செருப்பு வீச முயன்ற சம்பவம் நீதிபதிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் சென்னையில் கைதி ஒருவர் நீதிபதி மீது செருப்பை வீச முயன்ற சம்பவம் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
