ஆளுநர் பல்வேறு முட்டுக்கட்டை போட்டும் உயர்கல்வியில் முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது: அமைச்சர் கோவி.செழியன் பெருமிதம்
காரைக்குடி: உயர்கல்வித்துறையில் இந்தியாவிலேயே முதன்மையான மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற வீறுகவியரசர் முடியரசனார் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: உயர்கல்வித்துறை வளர்ச்சிக்கு ஆளுநர் பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.
துணைவேந்தர் நியமனத்தில் துவங்கி பல்கலைக்கழக வளர்ச்சிக்கு எவ்வளவு பங்கம் விளைவிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். துணைவேந்தர் நியமனத்தில் உள்ள முட்டுக்கட்டையை தகர்க்க இந்தியாவில் முதன்முதலில் நீதிமன்றத்தை நாடி அதற்கு உரிய உத்தரவை பெற்று தந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனாலும் அதனை ஏற்றுக் கொள்ளாத ஆளுநர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடர்ந்து தடை விதித்து வருகிறார்.
கலைஞர் பெயரில் அமைக்கப்பட வேண்டிய பல்கலைக்கழகத்திற்கு அனுமதி தராமல் அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி காலதாமதம் செய்து வருகிறார். சட்டப்படி நீதிமன்ற உத்தரவை பெற்று பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். எனவே முறைப்படி நாங்கள் எல்லா வகையான நடவடிக்கைகளும் எடுத்து வருகிறோம். என்ன தடை, யாரால் தடை என அனைவரும் அறிவார்கள்.
தடைகளை உடைத்தெறிந்து கலைஞர் பெயரிலான பல்கலைக்கழகத்தை கொண்டு வரக்கூடிய பெரும் முயற்சிக்கு, உயர்கல்வித்துறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பக்கபலமாக உள்ளார். நான்கரை லட்சம் பேருக்கு மேலாக 7.5 சதவீதத்தில் மாணவர்கள் படித்து வருகின்றனர். அவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து போன்ற அனைத்தையும் அரசே ஏற்று செயல்படுத்தி வருவதால் உயர்கல்வித் துறையில் தமிழ்நாடு இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இவ்வாறு கூறினார்.