சென்னை: அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் முதல்வரின் புகைப்படம் இருக்கலாம். ஆனால், பெயரையோ, அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் குறித்த விளம்பரத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் எனவும், முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கவும் கோரி அதிமுக மக்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் மற்றும் தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் இனியன் ஆகியோர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் பிறப்பித்த உத்தரவில், உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கட்சியின் சித்தாந்த தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதல்வர் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது. அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல, ஆளும் கட்சியின் பெயர், கொடி, சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது.
தமிழக அரசு புதிதாக தொடங்க உள்ள, அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதல்வரின் புகைப்படத்தையோ பயன்படுத்த கூடாது. அரசு நலத்திட்டம் தொடங்குவது, செயல்படுத்துவதற்கு எதிராக எந்த உத்தரவும் இந்த நீதிமன்றம் பிறப்பிக்கவில்லை. அதேசமயம், உங்களுடன் ஸ்டாலின் என்று முதலமைச்சர் பெயரை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து அதிமுக அளித்த புகாரை தேர்தல் தேர்தல் ஆணையம் விசாரிக்க இந்த வழக்கு தடையாக இருக்காது என்று உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 13ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில் இந்த உத்தரவை எதிர்த்தும் விளக்கம் கேட்டும் தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், அரசு பிளீடர் எட்வின் பிரபாகர் ஆகியோர் தலைமை நீதிபதி அமர்வில் முறையீடு செய்தனர். இதையடுத்து, விளக்கம் கேட்டு மனு தாக்கல் செய்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என்று தலைமை நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆகஸ்ட் 2ம் தேதி தொடங்கவுள்ள நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் ஜூன் மாதமே அறிவிக்கப்பட்ட திட்டம். திட்டத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 1256 முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இதற்காக 800 மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த நடவடிக்கைகளுக்கு திடீரென்று தடை போட்டால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்ற நோக்கத்தில் கடைசி நேரத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அறிவித்த உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் ஆகிய 2 திட்டங்களையும் செயல்படுத்த வகை செய்யுமாறு உத்தரவில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி அமர்வில் திங்கட்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.