Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசுப் பள்ளியில் 12ம் வகுப்பை முடித்து உயர்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் விழுக்காடு 75%-ஆக உள்ளது. 100% மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே இலக்கு: முதலமைச்சர் உரை

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (8.8.2025) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், “தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை 2025 - பள்ளிக் கல்வி”-யினை வெளியிட்டு, முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் மடிக்கணினிகளை வழங்கி உரையாற்றினார்.

முதலமைச்சர் ஆற்றிய உரையில்; "School Students-யும், இளைஞர்களையும் பார்த்தாலே ஒரு புதிய Energy வந்துவிடும்! உங்கள் வயதில் Enjoy-யும் செய்யலாம்... நன்றாக படித்து, சாதித்து, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும் மாறலாம்! அப்படி, எடுத்துக்காட்டாக மாறியிருக்கக்கூடிய உங்களை பாராட்டுகிறேன்! வாழ்த்துகிறேன்! மாணவர்களை சந்திக்கின்ற ஒவ்வொரு முறையும் கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். கொரோனா காலத்தில் நாம் ஆட்சிக்கு வந்தபோதும், அந்தப் பெருந்தொற்றால் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்படக் கூடாது என்று “இல்லம் தேடிக் கல்வி” போன்ற முன்னெடுப்புகளை எடுத்து, கல்வி வழங்கினோம்! நாங்கள் உங்கள் மீது வைத்த நம்பிக்கைக்குப் பலன்தான், உங்களின் சாதனைகள்!

அதனால்தான், பள்ளிக்கல்வி வரலாற்றில் இதை Special-ஆன விழா என்று சொல்கிறோம்! வேறு எந்த மாநிலத்திலும், தங்களின் மாணவர்களுக்கு இப்படிப்பட்ட பாராட்டு விழாக்களை நடத்துகிறார்களா? எனக்குத் தெரிந்து இல்லை! அந்த வகையில், இது சிறப்பான, தனித்துவமான விழா! திராவிட மாடல் அரசைப் பொறுத்தவரைக்கும், அனைத்து மாணவர்களும் பள்ளிக்கல்வி முடித்து, உயர்கல்வியில் சேர வேண்டும். அதற்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேரக் கூடிய இந்த மாணவர்கள் Motivation-ஆக இருக்க வேண்டும் என்றுதான் இந்த விழாவை நடத்துகிறோம்!

மாணவர்கள் படித்து பெரிய ஆளாக வருவதை பார்த்து மகிழ்ச்சி அடைவது, ஒரு தாயின் உணர்வு! இந்த விழாவும், திராவிட மாடல் அரசின் தாய்மை உணர்வுதான்! இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி அடைந்த அரசுப் பள்ளி மாணவர்களில், உயர்கல்வியில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? 75 விழுக்காடு! இந்த நம்பரை அடுத்த ஆண்டு இன்னும் அதிகமாக Beat செய்யக்கூடிய அளவுக்கு வரவேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். நம்முடைய இலக்கு 100 சதவீதம். உயர்கல்வியில் சேர்ந்தார்கள் என்பது தான். இந்த இலக்கை எட்ட உங்களை போன்ற மாணவர்கள்தான் உதவ வேண்டும். உங்கள் நண்பர்கள், நண்பர்களின் நண்பர்கள் என்று யாராவது College சேரவில்லை என்றால், எந்தச் சூழ்நிலையிலும் அவர்கள் படிப்பை கைவிட்டுவிடக் கூடாது என்று சொல்லி, அவர்களை நீங்கள் படிப்பைத் தொடர வைக்க வேண்டும்!

இங்கு வந்திருக்கக்கூடிய நீங்கள் எல்லோரும் பெரிய உயரத்திற்கு செல்ல இருக்கிறீர்கள்! அந்த உயரத்திற்கு முதல் அடி, College Life! அதிலும் நாட்டிலேயே முதன்மையான கல்வி நிறுவனங்களில் நுழையும்போது, உங்களுக்கு புது கதவுகள் திறக்கும்! புது சூழல் அமையும்! புது அனுபவங்கள் கிடைக்கும்! இது உங்களின் Career-க்கு மிகவும் உதவியாக இருக்கும்! 2022-இல் இருந்து கடந்த மூன்றாண்டுகளில், நம்முடைய அரசுப்பள்ளி மாணவர்களில் எத்தனை பேருக்கு முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்திருக்கிறது என்று தெரியுமா? 977 பேருக்கு இடம் கிடைத்திருக்கிறது! இந்த ஆண்டு மட்டும் எவ்வளவு தெரியுமா? 901. இன்னும் பல உயர்கல்வி நிறுவனங்களில் Admission முடியவில்லை… அதனால், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகும் என்று நான் நம்புகிறேன்!

இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால், கடந்த மூன்று ஆண்டுகளாக ஐ.ஐ.டி.க்குள் Single Digit-இல் நுழைந்துகொண்டு இருந்த நம்முடைய மாணவர்கள், இந்த ஆண்டு 27 பேர் நுழைய இருக்கிறார்கள்! அதாவது double digit. குறிப்பிட்ட சில Department-என்று இல்லாமல் 93 முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் 50 Departments-இல், 901 அரசுப் பள்ளி மாணவர்கள் சேருகிறார்கள்! இதில், 150 பேர் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்கள்! இதனால்தான், தம்பி அன்பில் மகேஸ் அடிக்கடி சொல்வார்… “அரசுப் பள்ளிகள் வறுமையின் அடையாளமல்ல! பெருமையின் அடையாளம்!” இந்தப் பெருமையை எங்களுக்குத் தேடித் தந்து, நெஞ்சை நிமிர்த்தி பேச வைத்திருக்கக்கூடிய உங்கள் எல்லோருக்கும் என்னுடைய வாழ்த்துகள்! பாராட்டுக்கள்!

நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் மாணவர்களாகிய உங்களுக்கு நன்றியைச் சொல்லிக்கொள்வது, அச்சப்படாதீர்கள்! தயங்காதீர்கள்! காடு எதுவாக இருந்தாலும், சிங்கம்தான் அங்கு Single! சிங்கம் தான் அங்கு ராஜா! அதுபோன்று, எளிய பின்னணியில் இருந்து பெரிய உயரத்திற்கு முயற்சியால் வந்திருக்கக்கூடிய நீங்கள்தான் அங்கே Real Hero! உங்கள் கெத்தை காண்பித்து ஜெயித்து வாருங்கள். உங்களை தூக்கி வைத்துக் கொண்டாட நாங்களும், இந்த உலகமும் தயாராக இருக்கிறது!

இந்த பெருமைமிகு விழாவில் தமிழ்நாட்டின் மாநிலப் பள்ளிக் கல்விக் கொள்கை 2025-ஐ வெளியிட்டது பெருமகிழ்ச்சி! தமிழ்நாட்டுக்கு என்று எல்லாவற்றிலும் ஒரு Unique Character இருக்கிறது. முற்போக்கான சிந்தனை இருக்கிறது! அதை அடிப்படையாக வைத்து, எதிர்காலத்திற்குத் தேவையான தொலைநோக்குப் பார்வையோடும் இந்தக் கல்விக் கொள்கையை உருவாக்கியிருக்கிறோம்! இதில் Highlight-ஆக சில Point-களை சொல்ல விரும்புகிறேன். இந்த கல்விக் கொள்கை மூலமாக, படித்து, மனப்பாடம் செய்வதைவிட சிந்தித்து, கேள்வி கேட்கின்ற மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்! எதிர்கால வாழ்க்கைக்கு தேவையான ஆற்றலை வழங்க இருக்கிறோம்!

தொழில்நுட்ப மனம் படைத்தவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்! படிப்பவர்களாக மட்டுமல்ல, படைப்பாற்றல் கொண்டவர்களாக மாணவர்களை உருவாக்க நினைக்கிறோம்! கல்வியோடு உடற்பயிற்சியும் இணைக்கப்படும்! தாய்மொழி தமிழ் நம்முடைய அடையாளமாக - பெருமிதமாக இருக்கும்! முக்கியமாக தமிழும் - ஆங்கிலமும் என்கிற இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கையாக இருக்கும்! மீண்டும் சொல்கிறேன்…. இருமொழிக் கொள்கைதான் நம்முடைய உறுதியான கொள்கை!

ஒவ்வொரு ஒன்றியத்திலும், புதிய மாதிரி வெற்றிப் பள்ளிகள் அமைக்கப்படும்! உண்டு உறைவிடப் பள்ளிகள் உருவாக்கப்படும்! கல்வித் தொலைக்காட்சியும், மணற்கேணி செயலியும் ‘ஒவ்வொரு வீடும் ஒரு வகுப்பறை’ என்ற நிலையை உருவாக்கும்! மதிப்பெண்களாக இல்லாமல் - மதிப்பீடுகளை நோக்கிய பயணமாக, தேர்வு முறை அமையும்! பசுமைப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்பறைகள் உருவாக்கப்படும். நான் முதல்வன் திட்டம் வேலைக்கு வழிகாட்டுவதாக மட்டுமல்லாமல், வாழ்க்கைக்கு வழிகாட்டுவதாக அமையும்!

இப்படி, கல்வித் துறையில் மாபெரும் மாற்றத்தை கொண்டுவர இருக்கிறோம். ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், “அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் உயர்தரக் கல்வி”! இதுதான், நம்முடைய திராவிட மாடல் அரசின் கல்விக் கொள்கை! பள்ளிகள் எல்லோருக்குமானது! அங்கு யாருக்கும் தடை இல்லை! தடுக்கப்படவும் விடமாட்டோம்! யாரும் புறக்கணிக்கப்படக் கூடாது! கல்வி பாகுபாட்டை நீக்குவோம்! நீங்கள் விரும்புகின்ற கல்வியைப் பெறுவதற்கான வாசலை, நம்முடைய கல்விக் கொள்கை திறந்து வைக்கும்! கல்விச் சமத்துவத்தை உருவாக்குவோம்! அறிவுக் கல்வியை அறிமுகம் செய்வோம்! முக்கியமாக அது பகுத்தறிவுக் கல்வியாக இருக்கும்! அறிவியலுக்குப் புறம்பான பிற்போக்குச் சிந்தனைகள் பள்ளிகளில் நுழைய அனுமதிக்க மாட்டோம்!

நம்முடைய மாணவர்கள் உலகளவில் போட்டி போட்டு, வெற்றி பெற இந்த மாநிலக் கல்விக் கொள்கை துணையாக இருக்கும்! மொத்தத்தில், கல்வியில் முன்னணி மாநிலமாக இருக்கின்ற தமிழ்நாட்டை மேலும் முன்னேற்றுவோம்! கல்வி மூலமாக, எதிர்காலத்தில் நீங்கள் எல்லோரும் பெரிய பெரிய அதிகாரிகளாக, அரசியல் தலைவர்களாக, அறிவியலாளர்களாக, மருத்துவர்களாக, சட்ட அறிஞர்களாக, பொறியாளர்களாக, கலைஞர்களாக உருவாகி, உங்கள் வீட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும்! இதுபோன்ற இன்னொரு மேடையில், உங்களை எடுத்துக்காட்டாகச் சொல்லி, மற்றவர்களை ஊக்கப்படுத்தும் அளவுக்கு நீங்களும் உயர வேண்டும், உயர வேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்" என கூறியுள்ளார்.