Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு பள்ளி, கல்லூரி விடுதிகள் இனி சமூகநீதி விடுதிகள் என அழைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் பல்வேறு துறைகளின் கீழ் செயல்படும் அரசு பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்’ என்று அழைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகளில் ஏற்படும் சாதிய மோதல்களைத் தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராய ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்தது. நீதிபதி சந்துரு மிக முக்கியமான பல்வேறு பரிந்துரைகளை தமிழ்நாடு அரசுக்கு வழங்கி இருக்கிறார். சாதி முன்னொட்டு பெயர்களுடன் அரசு பள்ளிகள் இருப்பதை நீக்க வேண்டும், அரசு, தனியார் பள்ளிகளின் பெயர்களோடு உள்ள சாதி முன்னொட்டுகளையும் பின்னொட்டுகளையும் நீக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

பள்ளியின் பெயரில் சாதி இருக்கக் கூடாது, தனிமனிதர் பெயரில் வைத்திருந்தால் அந்தப் பெயரோடும் சாதி இருக்கக் கூடாது என்று சொல்லப்பட்டு இருந்தது. இதனை தமிழ்நாடு அரசு நன்கு பரிசீலித்தது. நமது சமுதாயத்தின் பல்வேறு பின்தங்கிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர்கள் தொடர்ந்து கல்விப் பயின்றிட, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,739 விடுதிகளில் 1,79,568 மாணவ மாணவியர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த மாணவ மாணவிகளின் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு நடவடிக்கைகளைக் கடந்த 4 ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. இந்த மாணவர்களுக்கான உணவுச் செலவு மற்றும் பல்வேறு படிகளை உயர்த்தியது, விடுதிகளின் கட்டமைப்பு மேம்பாடு, அவர்களுக்குச் சிறப்புத் திறன் பயிற்சிகள் போன்ற பல்வேறு முன்னோடி முயற்சிகளின் காரணமாக மாணவர்களின் கற்கும் திறன் மேம்பட்டு உள்ளது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அடித்தட்டுக் குடும்பங்களைச் சார்ந்த இந்த மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் அதே வேளையில், நமது எதிர்கால சமுதாயத்தை ஒரு சமத்துவ சமூகமாக உருவாக்கிட, சாதி சமய உணர்வுகளைக் களைவது இன்றியமையாதது.

இந்த நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, தற்போது பல்வேறு சாதி சமயப் பிரிவுகளின் பெயர்களின்கீழ் செயல்பட்டு வரும் மாணவர் விடுதிகளின் பெயர்களை மாற்றிட தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் ஏழை மாணவர்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் ‘சமூகநீதி விடுதிகள்’ என்ற பொதுப் பெயரால் இனி அழைக்கப்படும். விடுதிகளுக்கு புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளதே தவிர, மாணவர்களுக்கான உரிமைகள், சலுகைகள், உதவிகள் அனைத்தும் அப்படியே தொடரும். அதில் எந்த மாற்றமும் இருக்காது.

இவ்விடுதிகளில் நமது தலைவர்களின் பெயர் சூட்டப்பட்டு செயல்பட்டு வரும் சில விடுதிகளும் உள்ளன. அந்த விடுதிகள் அத்தலைவர்களின் பெயரோடு சமூகநீதி விடுதி என்று சேர்த்து அழைக்கப்படும். தற்கால இளம் சந்ததியினர் அனைவரும் சாதி வேறுபாடின்றி ஒன்றிணைந்து, எதிர்கால தமிழ்ச் சமுதாயத்தை, சமத்துவச் சமுதாயமாகக் கட்டமைத்திட இந்த முயற்சிகள் அடித்தளம் அமைக்கும். சமூகநீதி, சமநீதி, சட்ட நீதி ஆகியவை அனைவர்க்கும் பொது என்ற நிலையை உருவாக்க திராவிட மாடல் அரசு தொடர்ந்து பங்காற்றும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.