சென்னை: தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிக்கை: உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களில் தேர்வின் அடிப்படையில் 15 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித் தொகையாக ரூ.2000 வீதம் வழங்கப்படும். இதற்கென ஆண்டுதோறும் தொடர் செலவினமாக ரூ.18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும். விடுதியில் தங்கி பயிலும் 45 மாணவர்களுக்கு 2025-26 கல்வியாண்டு முதல் உணவு வழங்க ஏதுவாக ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும் என்னும் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலை மாணவர்களுக்கு தேர்வின் அடிப்படையில் முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் ஆண்டுகளில், பயிலும் மாணவர்களுள் ஆண்டுக்கு 15 மாணவர்கள் என 75 மாணவர்களுக்கு மாதம் ரூ.2000 வீதம் 12 மாதங்களுக்கு ரூ.18 லட்சம், விடுதியில் தங்கி பயிலும் 45 மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு 1 மாதத்திற்கு ரூ.67,500 வீதம் தொடர் செலவினமாக ஓராண்டுக்கு ரூ.8 லட்சத்து 10 ஆயிரம் என மொத்தம் ரூ.26 லட்சத்து 10 ஆயிரம் அனுமதித்து ஆணையிட்டுள்ளார். இந்த அரசாணை கடந்த 12ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டிருப்பது நிறுவன மாணவர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. கல்வி உதவித் தொகையும், விடுதி மாணவர்களுக்கு உணவும் வழங்க ஆணை பிறப்பித்துள்ள முதல்வருக்கு மாணவர்கள் மகிழ்ச்சியையும், நன்றியையும் தெரிவித்துள்ளனர்.