சென்னை: மடிப்பாக்கத்தை சேர்ந்த ஓட்டுநர் லோகநாதன் (45), என்பவரிடம் சிலர் காவல் துறையில் ஓட்டுநர் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் பெற்றுள்ளனர். மேலும், அவருக்கு தெரிந்த 19 பேருக்கு தமிழ்நாடு காவல்துறை ஆயுதப்படையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.57 லட்சம் வசூலித்துள்ளனர். மொத்தம் ரூ.62 லட்சம் பெற்ற அந்த நபர்கள், போலியான பணி நியமன ஆணைகளை வழங்கி ஏமாற்றியுள்ளனர்.இது தொடர்பாக லோகநாதன் ஜூலை 16ம் தேதி, சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். விசாரணையில், சென்னையை சேர்ந்த கபாலி மற்றும் செல்வி என்ற தம்பதி, தூத்துக்குடியை சேர்ந்த கருப்பசாமி (எ) கவிராஜ் ஆகியோர், காவல்துறை ஓட்டுநர் மற்றும் ஆயுதப்படை காவலர் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளனர்.
மேலும் இவர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணிகள், தமிழ்நாடு சுற்றுலா துறையில் ஓட்டுநர் வேலைகள் வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதையடுத்து சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவின்பேரில், மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையாளர் ராதிகா மேற்பார்வையில் சிறப்பு படை அமைக்கப்பட்டது. இந்த படையினர் தீவிர விசாரணை நடத்தி, திருவல்லிக்கேணியை சேர்ந்த கபாலி (53), அவரது மனைவி செல்வி (45) ஆகியோரை சென்னையிலும், கருப்பசாமி (எ) கவிராஜ் (45) என்பவரை தூத்துக்குடியிலும் கைது செய்தனர். கைதானவர்களிடம் போலியான பணி நியமன ஆணைகள், காவல் உதவி ஆய்வாளர் சீருடையில் எடுக்கப்பட்ட போலிப் புகைப்படங்கள் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மூவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.