சென்னை: அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சபரிமலைக்கு இயக்கப்பட்டு வரும் சிறப்புப் பேருந்துகள் தருமபுரி, கிருஷ்ணகிரி, ஒசூர், சேலம், கரூர் பகுதிகளில் இருந்தும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.28 முதல் ஜனவரி 16 வரை இயக்கப்பட உள்ளது. டிச.27 முதல் 30 வரை கோயில் நடை சாத்தப்படுவதால், இடைப்பட்ட அந்த நாட்களில் மட்டும் பேருந்து இயக்கப்படாது. www.tnstc.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இந்த ஆண்டு சபரிமலை யாத்திரை சீசனை முன்னிட்டு அய்யப்ப பக்தர்களுக்கு ஒரு மகிழ்ச்சி தரும், வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. வடக்கு மாவட்டங்களான ஓசூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கரூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சபரிமலைக்கு நேரடியாகச் சிறப்புப் பேருந்து சேவைகளை முதன்முறையாக விரிவுபடுத்தியுள்ளது. இதுநாள் வரையில், சபரிமலைக்குச் செல்ல வெவ்வேறு மாவட்டங்களுக்கு, வடக்கு மாவட்ட பக்தர்கள் செல்லவேண்டிய நிலையில் இந்த அறிவிப்பு அவர்களுக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு காலமான நவம்பர் 28, 2025 முதல் ஜனவரி 16, 2026 வரை இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் கோவில் நடை சாத்தப்படும் நாட்களான டிசம்பர் 27 முதல் 30 வரை மட்டும் பேருந்துகள் இயக்கப்படாது. அதன் பிறகு மீண்டும் சேவைகள் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துப் பேருந்துகளிலும் GPS கண்காணிப்பு (GPS Tracking) வசதியும், அவசர உதவிக்கான வசதிகளும் (Emergency Assistance) உறுதி செய்யப்பட்டுள்ளன. இது பயணத்தின் பாதுகாப்பை மேம்படுத்தும். பக்தர்கள் தங்கள் பயணச் சீட்டுகளை www.tnstc.in என்ற SETC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளலாம்.


