Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆக.4ல் தேர்வு: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 4ம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் 28ம் தேதி முதல் ஏப்ரல் 29ம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆகஸ்ட் 4ம் தேதி எழுத்து தேர்வு நடைபெறும். இந்த அறிவிப்பின் மூலம் 3,921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. அதன்படி, ஆங்கிலத் துறையில் 656, தமிழ் துறையில் 569 உள்பட 65 துறைகளில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசின் இடஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணை அடிப்படையிலும், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்காமல், பிற மொழி எடுத்து படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கவுரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால், பணி அனுபவச் சான்றுகளை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும். கலை பாட பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.