சென்னை: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு நேற்று தொடங்கியது. தமிழ்நாட்டில் 169 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் பிஏ, பி.எஸ்சி, பி.காம்., பிபிஏ, பிபிஎம், பிசிஏ உள்ளிட்ட இளங்கலை பட்டப் படிப்புகளில் ஒரு லட்சத்து 7 ஆயிரம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், 2024-25ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 6ம் தேதி தொடங்கி 24ம் தேதியுடன் முடிவடைந்தது. 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தினர்.
இதை தொடர்ந்து, தரவரிசை பட்டியல் அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு மே 28 முதல் 30ம் தேதி வரை அந்தந்த அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடந்தது. இதில், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினரின் குழந்தைகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினர் கலந்துகொண்டனர். நேற்றைய தினம் முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு அந்தந்த கல்லூரிகளில் தொடங்கியது. வருகிற 15ம் தேதியுடன் முதற்கட்ட கலந்தாய்வு முடிவடையும். அதன் பின்னர் 2ம் கட்ட கலந்தாய்வு வரும் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்பு ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.