Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை

சென்னை: அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 125 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 301 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் நேரடி சேர்க்கை கடந்த 23ம் தேதி முதல் துவங்கி நடந்து வருகிறது.

மாணவர்கள் தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று விரும்பும் தொழிற்பிரிவை தெரிவு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் இல்லை. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதிவண்டி, விலையில்லா சீருடை, விலையில்லா காலணிகள், விலையில்லா பயிற்சிக்கான கருவிகள், கட்டணமில்லா பேருந்து வசதி இவை அனைத்தும் வழங்கப்படும்.

சென்ற ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 85% பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.