Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆட்சியை ஆட்டைய போட நினைத்த டிடிவியின் பருப்பு எடப்பாடியிடம் வேகவில்லை: ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் உரிய சிகிச்சை கொடுத்தீர்களா? பாவம் உங்களை சும்மா விடாது; உதயகுமார் சாபம்

மதுரை: அதிமுக முன்னாள் அமைச்சர் உதயகுமார் மதுரையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தினந்தோறும் பத்திரிகையாளர்களை சந்தித்து டிடிவி.தினகரன் ஏதேதோ கூறி வருகிறார். அவர் என்ன கூறுகிறார் என்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை. ஜெயலலிதாவால் 10 ஆண்டுகள் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டவர் டிடிவி.தினகரன். என் முகத்தில் விழிக்கக்கூடாது என்று கூட உத்தரவிட்டார். அதனால் தமிழ்நாட்டிற்கு வராமல் புதுச்சேரியில் தன்னுடைய தோட்டத்து பங்களாவில் பதுங்கி இருந்தார். தற்போது அதிமுகவை வலிமையோடு வெற்றிப்பாதையில் கொண்டு சென்று வரும் எடப்பாடி பழனிசாமி மீது அவதூறு பரப்புவதையே வேலையாக கொண்டிருக்கிறார். மனோஜ்பாண்டியன் திமுகவுக்கு சென்றதற்கு கூட எடப்பாடியார் தான் காரணம் என வாய் கூசாமல் டிடிவி.தினகரன் பொய் பேசுகிறார்.

அவருடன் இருந்த உமாதேவன், உசிலம்பட்டி மகேந்திரன் உள்ளிட்டோர் எல்லாம் ஏன் அவரை விட்டு விலகி வெளியே வந்தார்கள்? உங்களை நம்பி வந்த 18 எம்எல்ஏக்கள் இன்று அரசியல் அனாதைகளாக இருக்கிறார்கள். உங்களை நம்பி வந்த வெற்றிவேல், மேலூர் சாமி உங்களுக்காக உயிரையும் தியாகம் செய்தனர். அவர்களைப் பற்றி நீங்கள் சிந்திக்க நேரம் இருந்ததா? ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு ஆட்சியையும், கட்சியையும் அபகரிக்க திட்டம் போட்டீர்கள்? எடப்பாடியிடம் உங்கள் பருப்பு வேகவில்லை. அதிமுக கட்சியை தினகரன் ஆட்டைய போட நினைத்தார். அது நிகழாமல் போனதால் அந்த விரக்தியின் காரணமாக வாய்க்கு வந்ததை எல்லாம், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல பேசிக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி மீது ஏன் கொடநாடு விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறுகிறார். போயஸ் கார்டனில் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பற்றி கடிதம் இருந்தது. அதை நான் கிழித்து விட்டேன் என்று கூறுகிறார். இப்படி ஒரு கீழ்த்தரமான சிறுமையான அரசியல் செய்து, வெறும் வாயில் அவலை மெல்லுகிறார். பக்கத்து இலைக்கு பாயாசம் வேண்டும் என்பதைப் போல இவரை சேர்க்க வேண்டும், அவரை சேர்க்க வேண்டும் என்று அவரே கூறுகிறார். இப்படி பேசுவது எல்லாமே விரக்தியின் உச்சமாகத்தான் உள்ளது. எடப்பாடி ராணுவ கட்டுப்பாடோடு அதிமுகவை நடத்திக் கொண்டிருக்கிறார். இதை பொறுக்க முடியாமல் விசுவாசம், துரோகம் என பேசிக் கொண்டிருக்கிறார். உங்களைப் போன்றவர்களின் கொசுக்கடியை தாங்க முடியவில்லை. நானும் ரவுடி தான் என்பது போல டிடிவி.தினகரன் பரிதாபகரமான நிலைக்கு சென்று விட்டார்.

முதலமைச்சராக இருக்கும்போதே ஜெயலலிதா சிறைக்கு சென்றதற்கு யார் காரணம்? ஆண்டவனுக்கே வெளிச்சம். ஜெயலலிதாவிற்கு மருத்துவமனையில் வைத்து உரிய சிகிச்சை கொடுத்தீர்களா என ஆயிரம் கேள்விகள் இருக்கின்றன. ரகசிய ஆவணங்களை கிழித்து எறிந்து விட்டதாக சொல்வது சிறு பிள்ளைத்தனமாக இருக்கிறது. அதிமுக மூன்றாம் இடத்திற்கு வந்து விடும் என்று கூறுவது, ஆடு நனைகிறதே என ஓநாய் அழுவது போல உள்ளது. ஜெயலலிதா உங்களை எதற்காக நீக்கினார் என்று கூறுங்கள்? அதற்குரிய ஆவணத்தை எல்லாம் நீங்கள் கிழித்து விட்டீர்களா? உங்கள் மீது பெரா வழக்கு உள்ளது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு செல்லலாம். ஜெயலலிதாவுக்கு செய்த பாவம் உங்களை சும்மா விடாது. பொய் மூட்டைகளை பதவி ஆசைக்காக கூறக்கூடாது. ஊடகங்களில் ஒரு மாதத்திற்கு பேட்டி கொடுக்கவில்லை என்றால் டிடிவி.தினகரனை மக்கள் மறந்துவிடுவார்கள். உங்களால் ஒரு மாதம் பேசாமல் மவுன விரதம் இருக்க முடியுமா? இவ்வாறு கூறினார்.

* நன்றி சொல்லாவிட்டாலும் விஜய்க்கு நல்லது செய்வோம்

உதயகுமார் கூறுகையில், ‘தவெக, தேமுதிக, பாமக கட்சிகள் அதிமுகவுடன் ஒன்றாக இணைய வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். எல்லா கட்சி தலைவர்களையும் போல விஜய்யும், தன் தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக திமுக - தவெக இடையே தான் போட்டி என்கிறார். விஜய்க்காக நாங்கள் சட்டமன்றத்தில் பேசியதற்காக அவர் எங்களுக்கு நன்றி சொல்லாவிட்டாலும் பரவாயில்லை. நாங்கள் நல்லதை செய்து கொண்டே இருப்போம். நிச்சயமாக எடப்பாடி தலைமையில் மெகா கூட்டணி அமைப்போம்’ என்றார்.