இரண்டு நாள் அரசு முறை பயணமாக ரஷ்ய அதிபர் புடின் வருகிற 4ம் தேதி இந்தியா வருகை: பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை
புதுடெல்லி: ரஷ்யா -உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவருவதற்காக என்று கூறி ரஷ்யாவிடம் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியாவிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரிகளை விதித்தார். இதனையடுத்து இந்தியா ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை சமீபத்தில் குறைத்துள்ளது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இரண்டு நாள் அரசு முறை பயணமாக வருகிற 4ம் தேதி இந்தியா வருகின்றார்.
இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, ‘‘ ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 23வது இந்தியா-ரஷ்யா வருடாந்திர உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் அரசு முறை பயணமாக டிசம்பர் 4ம் தேதி இந்தியா வருகின்றார். டிசம்பர் 5ம் தேதி வரை அவர் இங்கு தங்கியிருப்பார். ரஷ்ய அதிபரின் இந்த பயணத்தின்போது அவரை வரவேற்கும் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு அவருக்கு குடியரசு தலைவர் மாளிகையில் விருந்தளிக்கிறார்.
ரஷ்ய அதிபரின் இந்த பயணமானது இருநாடுகளின் உறவுகளில் நிலவும் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்யவும், சிறப்பான, சலுகையுடன் கூடிய இருதரப்பு மூலோபாய கூட்டாண்மையை வலுப்படுத்துவதற்கான தொலைநோக்கு பார்வையை முன்வைக்கவும், பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்த கருத்துக்களை பரமாறிக்கொள்ளவும் இந்தியா, ரஷ்யாவின் தலைவர்களுக்கு நல்ல வாய்ப்பை வழங்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிபர் புதின் மற்றும் பிரதமர் மோடி இருவருக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின்போது பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் சிவில் அணுசக்தி ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறிப்பாக உக்ரைன் மோதல் விவகாரம் இருவரும் பேசுவார்கள்.

