Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் வருவாய்த்துறையில் 476 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (10.12.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் நிலஅளவைப் பதிவேடுகள் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் கீழ் செயல்படும், நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் முக்கிய செயல்பாடுகள் நிலங்களை அளவிடுதல், உட்பிரிவு செய்தல், பட்டா மாற்றம் செய்தல், நில ஆவணங்களைப் பராமரித்தல், கணினிமயமாக்கல் மற்றும் நில உரிமை முறைகளை முறைப்படுத்துதல் போன்றவையாகும். இது வருவாய் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு, நிலம் தொடர்பான உரிமைகள், இருப்பிடம், அளவு மற்றும் வகை பற்றிய தகவல்களைப் பதிவு செய்து, வெளிப்படைத்தன்மையுடன் நிர்வகிப்பதை உறுதி செய்கிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நிலஅளவைப் பதிவேடுகள் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெறும் வகையில் கடந்த 4 ஆண்டுகளில் 800 நிலஅளவர்களும், 302 வரைவாளர்களும் புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தற்சமயம் 2025-ஆம் ஆண்டில் 376 நிலஅளவர்கள் மற்றும் 100 வரைவாளர்கள் காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நபர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இன்றையதினம் தமிழ்நாடு முதலமைச்சர் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இத்துறையின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் இணையவழி பட்டா மாறுதல் சேவையின் மூலமாக இவ்வரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்களில் 61.77 இலட்சம் பட்டாக்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்களில் 79.25 இலட்சம் பட்டாக்களும் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்கள் தீர்வு செய்ய 60 நாட்களும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள் தீர்வு செய்ய 31 நாட்கள் என இருந்து வந்த நிலையில், இவ்வரசு பொறுப்பேற்ற பிறகு உட்பிரிவு உள்ள பட்டா மாறுதல் இனங்கள் 30 நாட்களிலும், உட்பிரிவு அல்லாத பட்டா மாறுதல் இனங்கள் 14 நாட்களிலும் தீர்வு செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் அரசு நிலங்களில் நீண்ட காலமாக அனுபவம் செய்து வந்த ஏழை எளிய மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கும் பல்வேறு திட்டத்தின் கீழ் இந்த அரசு பொறுப்பேற்ற நான்கரை ஆண்டுகளில் இதுவரை 20.41 இலட்சம் பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., நில நிருவாக ஆணையர் டாக்டர் கே.சு.பழனிசாமி, இ.ஆ.ப., நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட இயக்குநர் தீபக் ஜேக்கப், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.