மதுரை: சேலத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழ்நாட்டில் அரசு அலுவலகங்கள் உள்பட ஏராளமான கட்டிடங்கள் பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளன. ஆபத்தான சூழலில் பொதுமக்கள் அவற்றை பயன்படுத்தி வருகின்றனர். மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில், இதுபோன்ற கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். கடந்த 22ம் தேதி மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்றேன். கோயில் காவல் நிலைய கட்டிடத்தின் அருகே ஒரு பகுதி இடிந்து விழுந்தது. மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வெளிநாட்டினரும் வந்து செல்லும் நிலையில் விபத்துக்கள் ஏற்பட்டால் பாதிப்பு அதிகமாக இருக்கும். எனவே, தமிழ்நாட்டில் போதிய பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ள கட்டிடங்களை அகற்றுமாறு உத்தரவிட வேண்டும் எனகூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் பொதுப்பணித் துறை மற்றும் வருவாய் துறை செயலர்கள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.
Advertisement