Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

207 அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் இல்லையா? தொடக்க கல்வித்துறை விளக்கம்

சென்னை: தமிழகத்தில் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இல்லை என்று வெளியாகியுள்ள செய்திக்கு தொடக்க கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தொடக்கக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாட்டில் 207 அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பூஜ்ஜியம் நிலையில் உள்ளதால் அந்த பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது என்று செய்தி வெளியாகியுள்ளது. அரசு, நிதி உதவி பெறும் பள்ளிகள், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், ஒன்றிய அரசுப் பள்ளிகள் என மொத்தம் 58 ஆயிரத்து 924 உள்ளன.

இவற்றில் 1 கோடியே 21 லட்சத்து 22 ஆயிரத்து 814 மாணவ மாணவியர் படிக்கின்றனர். 5 லட்சத்து 34 ஆயிரத்து 799 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவற்றில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் 208, நிதியுதவி பெறும் பள்ளிகள் 114, பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகள் 11, சுயநிதி பள்ளிகள் 869, ஒன்றிய அரசுப் பள்ளிகள் 2 ஆகியவற்றில் மாணவர்கள் சேர்க்கை நிகழவில்லை.

அதேபோல அரசுப் பள்ளிகளில் பள்ளிக் கல்வி 157, ஆதிதிராவிடர் நலம் 13, சமூக பாதுகாப்பு, 19, பழங்குடியினர் நலம் 8, மாநகராட்சி 3, மாற்றுத் திறனாளிகள் நலம் 2, கள்ளர் சீர் மரபினர் பள்ளிகள் 3, நகராட்சி 2, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் குடியிருப்பு பள்ளிகள் 1 என 208 பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நிகழவில்லை. குழந்தை பிறப்பு வீதம் நம் மாநிலத்தை பொறுத்தவரையில் 2011-2015ம் ஆண்டில் 1.68ல் இருந்து 2021-2025 காலகட்டத்தில் 1.54 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், மேற்கண்ட பள்ளிகளில் அனைத்து வகை பள்ளிகளில் தெரிவிக்கப்பட்டவாறு மாணவர் சேர்க்கை நிகழாத பள்ளிகளில் சுமார் 72 சதவீதம் பள்ளி்கள் சுயநிதிப் பள்ளிகள்.

அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்ற வேறுபாடுகள் இல்லாமல் மாணவர்கள் சேர்க்கை குறைவுக்கு தமிழ்நாட்டில் குழந்தை பிறப்பு வீதம் குறைவாக இருப்பதே முக்கிய காரணம். மேலும், மேற்கண்ட 207 பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை தேவை ஏற்பட்டால், மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும். பள்ளிகளை மூடுவது என்பது அரசின் நோக்கமல்ல. மேற்கண்ட செய்தி பரவியதில், கிராம மற்றும் தொலைதூரப் பகுதிகளில் அமைந்துள்ளவையாகும்.

மேற்கண்ட பள்ளிகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் பள்ளிகள் சேரும் தகுதியான வயதில் ஐந்தும் அதற்கு அதிகமான வயதிலும் குழந்தைகள் யாரும் இல்லை. மேலும், கிராமப்புறங்களில் வசிப்போர் பலர் நகர்ப்புறங்களுக்கு வேலை வாய்ப்புக்காக இடம் பெயர்வதாலும் அண்டை மாநிலங்களுக்கு செல்வதாலும் அதனால் அரசுப் பள்ளிகளில் படித்த குழந்தைகள் புதிய இடங்களுக்கு பெற்றோருடன் செல்லும் நிலை உள்ளது.

அதனால் அந்த வகை பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து மாணவர் இல்லாத நிலையை அடைந்துள்ளன. நடப்பு கல்வியாண்டில் இதுவரை 4 லட்சத்து 7 ஆயிரத்து 379 மாணவர்்கள் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். தற்போதைய, EMIS புள்ளி விவரங்களின்படி தனியார் பள்ளிகளை காட்டிலும் 1 லட்சத்து 75 ஆயிரத்து 660 மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்து படித்து வருகின்றனர்.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 61 லட்சத்து 49 ஆயிரத்து 337 பேரும், தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 59 லட்சத்து 73 ஆயிரத்து 677 பேரும் படித்து வருகின்றனர். வரும் கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கையிலும் சேர்க்கையான மாணவர்களை தக்க வைப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படும். இவ்வாறு தொடக்க கல்வித்துறை தெரிவித்துள்ளது.

* தற்போதைய, EMIS புள்ளி விவரங்களின்படி தனியார் பள்ளிகளை காட்டிலும் 1 லட்சத்து 75,660 மாணவர்கள்

அரசுப்பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்து படித்து வருகின்றனர்