சென்னை: மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (எஸ்சிஇஆர்டி) சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்: அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்சிந்தனை வினாக்கள் மற்றும் கற்றல் அடைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் திறனை மேம்படுத்த ‘எதிர்காலத்துக்கு தயாராகு’ (future ready-ப்யூச்சர் ரெடி) எனும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மாதந்தோறும் முதல் வாரத்தில் 1 முதல் 9ம் வகுப்பு வரை ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் பாடம் சார்ந்த பொது அறிவு ஆகியவற்றில் மாணவர்கள் படித்த கற்றல் விளைவுகளை ஒட்டி உயர்சிந்தனை வினாக்களை வடிவமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.அக்டோபர் முதல் ஒவ்வொரு மாதமும் தேர்வு வினாக்களை https://exam.tnschools.gov.in என்ற இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
இந்த வினாக்களை கொண்டு மாணவர்களிடம் மதிப்பீட்டுத் தேர்வு நடத்தப்பட வேண்டும். வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற எண்ணில் ஆசிரியர்கள் தொடர்பு கொள்ளலாம். அதன்பின் வினாக்களுக்கு மாணவர்கள் சுயமாக விடை அளிக்கும் வகையில் பாட ஆசிரியர்கள் அவர்களுடன் கலந்துரையாடி வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.
இதை தலைமை ஆசிரியர்கள் கண்காணிக்க வேண்டும். 1 முதல் 5ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் இந்த வினாக்களை எண்ணும் எழுத்தும் செயல்பாடாகவும், 6 முதல் 9ம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்கள் வகுப்பறை பயிற்சியாகவும் பின்பற்ற வேண்டும்.
