சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் அமைப்பு (யு.டி.ஐ.எஸ்.இ) ஆய்வில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் முதலாம் வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு முழுவதுமுள்ள கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வினை மேற்கொண்டு மாணவர்கள் இல்லாத பள்ளிகள், குறைவாக உள்ள பள்ளிகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ள பள்ளிகள், பள்ளிக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்புகள் போன்றவற்றை ஆய்வு செய்து கல்வித்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக அரசுக்கு அறிக்கை அனுப்பச் செய்ய வேண்டும்.
அதனடிப்படையில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு பள்ளிகளில் படிப்பவர்களுக்கு அனைத்து உயர் படிப்புகள் மற்றும் அரசு வேலைகளில் முன்னுரிமை சதவீதத்தையும் அரசு அதிகரித்து மாணவர் சேர்க்கையை அதிகரிக்க உரிய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
