சர்வதேச அளவிலான மற்றொரு சிறப்புமிக்க விளையாட்டுத் தொடரை வெற்றிகரமாக நடத்திக் காட்டியிருக்கிறது தமிழக அரசு. இதன்மூலம் உலக விளையாட்டு அரங்கில் இந்தியாவின் தலைநகராக தமிழகத்தை தலை நிமிரச் செய்த பெருமையும் பெற்றுள்ளது. ஆம். உலக கோப்பை ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டித்தொடரை, இந்த முறை தமிழக விளையாட்டுத்துறை ஏற்று நடத்தியது. இதுபோன்ற சர்வதேச விளையாட்டுத்தொடரை ஏற்று நடத்துவது சாதாரணமான ஒன்றல்ல. வெளிநாட்டில் இருந்து வரும் வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருக்கான நவீன கட்டமைப்பு வசதிகள் மிகவும் அவசியம். பாதுகாப்பு பணிகளையும் கவனிக்க வேண்டும்.
அதை விட முக்கியமானது சர்வதேச தரத்திலான மைதானங்கள். அதுவும் ஹாக்கி போன்ற விளையாட்டு நடத்த வேண்டுமென்றால், பல கோடி மதிப்பிலான செயற்கையிழை மைதானங்கள் கட்டாயம். இதற்காக தமிழக அரசு ரூ.44 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருந்தது. 24 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்றனர். பங்கேற்ற நாடுகளும் சாதாரணமானதல்ல. ஜெர்மனி, ஸ்பெயின், சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட புகழ் பெற்ற அணிகளும் பங்கேற்றன. போட்டிகள் சென்னை மேயர் ராதாகிருஷ்ணன் மைதானம், மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் நடந்தன.
மதுரையில் சர்வதேச போட்டியா? இதெல்லாம் சாத்தியமாகுமா என பலரும் யோசித்தனர். ஆனால், தமிழக அரசு விளையாட்டுத்துறை அதை சாதித்து காட்டியிருக்கிறது. அவ்வப்போது மழை குறுக்கே புகுந்து விளையாடினாலும், போட்டிகள் தடையின்றி நடந்தன. சென்னையில் நடந்த நேற்றைய இறுதிப்போட்டியுடன் இத்தொடர் விடை பெற்றாலும், சுமார் 2 வாரங்களாக ஒரு சிறு தடையுமின்றி இத்தொடரை சிறப்பாக நடத்திய பெருமை தமிழக அரசையும், விளையாட்டுத்துறை அமைச்சரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினையே சேரும். இதன்மூலம் தமிழ்நாட்டின் பெருமை உலக அரங்கில் பெரிய அளவில் பேசப்படும். முன்னதாக கடந்த 2022ல் மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை, இந்திய செஸ் கூட்டமைப்புடன் இணைந்து, தமிழ்நாடு ரூ.114 கோடியில் நடத்தியது.
இதில் 186 நாடுகளைச் சேர்ந்த 1,600க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். ஒரு மினி ஒலிம்பிக் போல நடத்தப்பட்ட பல வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்ற இத்தொடரை சிறப்புடன் நடத்தி பாராட்டுகளை பெற்றது தமிழக அரசு. அது மட்டுமா? ஃபார்முலா 4 கார் பந்தயம் எல்லாம் நினைச்சு பார்க்க முடியுமா? அதையும் நடத்திக் காட்டியுள்ளது. வெளிநாடுகளில் மட்டுமே நடத்தப்பட்டு வரும் அலைச்சறுக்கு போட்டி, சர்வதேச மகளிர் டென்னிஸ் என தமிழக அரசு ஏற்று நடத்திய சர்வதேச போட்டிகள் எல்லாமே சிறப்பாகவே முடிவடைந்துள்ளன. அடுத்தபடியாக, தமிழக விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் ஜொலிக்க உதவும்விதமாக, சென்னை செம்மஞ்சேரியில் ரூ.261 கோடி மதிப்பில் சர்வதேச விளையாட்டு நகரம் அமைப்பதற்கான துவக்கக்கட்ட பணிகள் வேகமடைந்துள்ளன.
ஒரு மாநிலத்தின் வளர்ச்சிக்கு கல்வியும், சுகாதாரமும் மிகவும் முக்கியம். அதேநேரம் ஆரோக்கியமான உடல்நலனுக்கு விளையாட்டும் முக்கியத்துவம் என்பதையும் தமிழக அரசு உணர்ந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு மாவட்டந்தோறும் தரமான மைதானங்கள், பரிசுத்தொகை, சிறப்பு பயிற்சி, ஊக்கத்தொகை, விருது என கவுரவித்து அடுத்தக்கட்டத்தை நோக்கி, அவர்களை முன்னேற்றப்பாதையில் பயணிக்க வைக்கும் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.


