பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசின் திட்டங்களைபற்றி தெரியப்படுத்த வேண்டும்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வேண்டுகோள்
சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமையில் சென்னை, திருச்சி, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மண்டலங்களின் இணை இயக்குநர்கள் மற்றும் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுடனான பணி ஆய்வு கூட்டம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் குறித்து கடைகோடி மக்களுக்கு சென்று சேரும் வகையில் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அரசு செயல்படுத்தி வரும் எண்ணற்ற திட்டங்களை பற்றி தெரியப்படுத்த வேண்டும்.
உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்களின் முகாம்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் குடும்ப அட்டைகள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய கோரிக்கைகள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டு வருகிறது. இந்த முகாம்களில் பயன்பெறும் பயனாளிகளின் வீடியோக்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றி அனைத்து மக்களும் பயன்பெறும் வண்ணம் தங்களது பணிகளை சிறப்பாக செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர் வைத்திநாதன், செய்தி மக்கள் தொடர்பு துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) செல்வராஜ், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) பாஸ்கரன் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.