பீகார் தேர்தல் முடிவு குறித்து கார்கே வீட்டில் நடந்த காங்கிரஸ் கட்சியின் அவசர கூட்டத்திற்கு பிறகு காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் கூறும்போது, ‘முழு தேர்தல் செயல்முறையும் கேள்விக்குரியது என்றும் வெளிப்படைத்தன்மை இல்லை. தேர்தல் ஆணையம் நடந்து கொண்ட விதமும் சரியில்லை. காங்கிரஸ் கட்சி விரைவில் தேர்தல் முடிவை பகுப்பாய்வு செய்து, அடுத்த சில வாரங்களில் உறுதியான ஆதாரங்களை வெளியிடும். ஏனெனில் பீகாரில் இருந்து வந்த இந்த முடிவு நம் அனைவருக்கும் நம்பமுடியாதது.
இது காங்கிரசுக்கு மட்டுமல்ல. முழு பீகார் மக்களும் இதை நம்பவில்லை, எங்கள் கூட்டணி கட்சிகளும் கூட நம்பவில்லை. நாங்கள் அவர்கள் அனைவருடனும் விவாதித்தோம்; அவர்கள் அதை நம்பவில்லை. ஏனென்றால் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சிக்கு 90 சதவீதத்திற்கும் அதிகமான வெற்றி விகிதம் என்பது நம்பமுடியவில்லை. இது இந்திய வரலாற்றில் நடக்கவில்லை. நாங்கள் முழுமையான பகுப்பாய்வு செய்கிறோம்;
பீகார் முழுவதும் தரவுகளை சேகரித்து வருகிறோம். ஒன்று அல்லது இரண்டு வாரங்களுக்குள், உறுதியான ஆதாரங்களை வெளியிடுவோம். தேர்தல் ஆணையம் முற்றிலும் ஒருதலைப்பட்சமானது. அவர்கள் என்ன செய்தாலும், வெளிப்படைத்தன்மை இல்லை, எனவே, இந்த செயல்முறை கேள்விக்குரியது. எப்படியிருந்தாலும், பீகார் முழுவதிலும் இருந்து அனைத்து தரவுகளையும் சேகரித்து, பின்னர் உண்மைகளை மக்கள் முன்வைப்போம்.
நாங்கள் தேர்தல் ஆணையத்தின் பங்கு பற்றிப் பேசி வருகிறோம். அரியானா தேர்தலின் போது இதைப் பற்றிப் பேசினோம். அரியானா தேர்தலில் மோசடியாக பா.ஜ வெற்றி பெற்றது. எங்கள் ஆதாரங்களை தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்கச் சொன்னோம். அதே போல் பீகார் தேர்தல்களிலும், நாங்கள் உறுதியான ஆதாரங்களுடன் வருவோம்’ என்றார்.


