குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை
சென்னை: குடியிருப்புகள், தெருக்கள், சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க வழிகாட்டுதலை உருவாக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. உள்ளூர் மக்களிடையே நிலவும் சூழ்நிலை, உள்ளூர் மக்களின் கருத்துகளை பெற்று மதிப்பாய்வு செய்ய வேண்டும். ஆதிதிராவிடர் காலணி, ஹரிஜன் குடியிருப்பு போன்ற பெயர்களை கட்டாயம் மாற்ற வேண்டும். கள நிலைமை, களத்தின் உண்மைத்தன்மையின் அடிப்படையில் கவனமாக இப்பணியை செய்ய வேண்டும்.
ஊரகப் பகுதிகளை பொறுத்தளவில், உள்ளூர் உண்மைத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு வட்டார வளர்ச்சி அலுவவர்களால் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் உதவி இயக்குநர் நிலையிலான மண்டல அலுவலரால் முழுமையாகச் சரிபார்க்கப்படுதல் வேண்டும். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளை பொறுத்தளவில், உள்ளூர் உண்மைத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு செயல் அலுவலர்கள் / ஆணையர்களால் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள், தொடர்புடைய பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் /நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரால் சரிபார்க்கப்படுதல் வேண்டும்.
அவ்வாறு சரிபார்க்கப்பட்ட குடியிருப்புகள், சாலைகள். தெருக்கள், பொதுவான சொத்துக்களின் பெயர் மாற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரால் மாவட்ட அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட வேண்டும். இதன் மீது ஏதுமிருப்பின், அவற்றை அறிவிக்கை வெளியிடப்பட்ட நாள்முதல் 21 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அளிக்க காலஅவகாசம் வழங்கப்பட வேண்டும். அறிவிக்கை வெளியிடப்பட்ட 21 நாட்களுக்குள் ஆட்சேபனைகள்/கருத்துக்கள் ஏதும் பெறப்படின், அவற்றை முறையாக பரிசீலித்து, ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பெயர் மாற்றங்கள் குறித்த தனித்தனியான ஒருங்கிணைந்த செயற்குறிப்புகள் மாவட்ட ஆட்சித்தலைவரால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் / நகராட்சி நிர்வாக இயக்குநர் /பேரூராட்சிகளின் இயக்குநர் வழியாக. பின்வரும் படிவத்தில் அரசுக்கு அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும்.
அரசளவில் பெறப்படும் செயற்குறிப்புகள் 1994 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின் பிரிவு 158 / 1998 ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின் பிரிவு 129-இன் கீழ் வரையறுக்கப்பட்ட வகைமுறைகளைப் பின்பற்றி பெயர்மாற்றம் குறித்த முடிவுகள் இறுதி செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட வேண்டும். குளம் மற்றும் நீர்நிலைகளுக்கு ரோஜா, மல்லி, செம்பருத்தி, முல்லை என பூக்களின் பெயர்களை சூட்ட வேண்டும். தெருக்கள், சாலைகளுக்கு திருவள்ளுவர், கபிலர், பாரதியார், பாரதியார், பெரியார் பெயர்களை சூட்டலாம். குடியிருப்பு, சாலைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்கும் பணிகளை நவ.1 1ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.