நாகப்பட்டினம்: ஆற்றில் தூர்வாரும் பணிக்கு அரசு ஆணை வெளியிட்டது கூட தெரியாமல், ஆட்சிக்கு வந்தால் தூர்வாருவோம் என்று எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்ததை வேளாங்கண்ணி பகுதி மீனவர்கள் கிண்டல் செய்தனர்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கீழ்வேளூர் தொகுதியில் பிரசாரம் முடித்து இரவு வேளாங்கண்ணியில் தங்கினார்.நேற்று வேளாங்கண்ணி பேராலயம் சென்ற அவர், பிரார்த்தனையில் ஈடுபட்டார். அங்கிருந்து புறப்பட்ட அவர் வேளாங்கண்ணி கடற்கரை சாலை வழியாக செருதூர் சென்றார். அப்போது, பாஜ மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் பாஸ்கர் தலைமையில் பாரத் மாதாகி ஜே கோஷத்துடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து, செருதூர் வெள்ளையாற்றில் எடப்பாடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மீனவ பஞ்சாயத்தார்களை அவர் சந்தித்தார். செருதூர் மீனவ கிராம மக்களின் நீண்ட நாள் பிரச்னையான செருதூர் வெள்ளையாற்றில் முகத்துவாரம் தூர்வாரும் பணியை தொடங்க வேண்டும்.இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடற்கொள்ளையர்களால் செருதூர் மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் உடைமைகளை பறித்து செல்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதை கேட்ட எடப்பாடி, ஆட்சிக்கு வந்த பின்னர் தூர்வார உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். ஆனால் ஏற்கனவே, செருதூர் கிராம மீனவர்கள், முகத்துவாரம் தூர்வாரப்படாமல் இருப்பதால் பைபர் படகுகளை மீன் இறங்குதளத்திற்கு கொண்டு வர முடியாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும், தூர்வாரும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு செருதூர் வெள்ளையாறு முகத்துவாரத்தில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் கரை பாதுகாப்பு சுவர் அமைக்க நிதி ஒதுக்கப்பட்டு கடந்த 17ம் தேதி அரசாணை வெளியிட்டுள்ளது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசாணை வெளியிடப்பட்டுள்ளதை கூட தெரியாமல், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்தால் செருதூர் முகத்துவாரம் தூர்வாரப்படும் என்று உறுதி அளித்ததை கேட்டு மீனவர்கள், இவரு தெரிஞ்சுதான் பேசுறாரா? தெரியாமல் பேசுகிறாரா? என்று கிண்டலடித்தனர்.