சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய அதிரடி சோதனையில் 37 அரசு அலுவலகங்களில் இருந்து கணக்கில் வராத ரூ.37.74 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனால் சார்பதிவாளர் அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகங்கள், சுற்றுச்சூழல்துறை அலுவலகங்கள், தீயணைப்பு துறை அலுவலகங்களில் அதிகளவில் பரிசு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த பொருட்கள் பயனாளிகள் அரசு அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு அன்பளிப்பு அளிக்கப்படுவதாக லஞ்ச ஒழித்துறைக்கு தொடர் புகார்கள் வந்தது.
அந்த புகாரை தொடர்ந்து மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகம் என மொத்தம் 37 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பிக்கள் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் நேற்று முன்தினம் முதல் நேற்று வரை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அரசு அலுவலகங்களில் கணக்கில் வராத 37 லட்சத்து 74 ஆயிரத்து 869 ரூபாய் ரொக்கம், பட்டாசு பெட்டிகள், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சோதனை வரும் தீபாவளி வரை தொடரும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.